NFTECHQ

Saturday 2 February 2019


புயலை எதிர்த்து பூத்த பாளை!

கஜா புயலை செய்திக் காற்றாக வீச வைத்த ஊடகங்கள் ஓய்ந்துவிட்டன. வீழ்ந்த மரங்களுக்கும், வாழ்ந்த வாழ்வுக்கும் நிவாரணம் கொடு என்று கேட்ட மக்களின் ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கப்பட்டுவிட்டன.
கஜா புயலின் போது என் டெல்டா மண்ணில் வேதனையில் திரிந்து சென்னை திரும்பிய நான், போன வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன். கஜாவால் வேட்டையாடப்பட்ட என் உறவுகளின் வீடுகளுக்கு மீண்டும் சென்று பார்த்தேன். திருத்துறைப்பூண்டி பகுதிதான் கஜாவால் கடுமையான சேதத்தைச் சந்தித்திருந்தது. தென்னை மரங்களை எல்லாம் பார்த்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். குளங்களில் எல்லாம் தண்ணீர் மீது இளநீர் தேங்காய்கள் விழுந்து மிதந்துகொண்டிருந்தன. அதே குளங்களில் கஜாவால் வளைத்து ஒடிக்கப்பட்ட தென்னைகள் தங்கள் சோக முகத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடந்தன. இப்போது ஊருக்குப் போனபோது அறுவடைக் காலம். ஆங்காங்கே சாலையோரங்களில் அறுவடை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ’‘நல்லா கதிர் விடுற நேரத்துல கஜா வந்து ஆட்டி வச்சிருச்சு... நெல் எல்லாம் கருக்காவாப் போச்சு. கண்டுமுதல் பாதியாக் குறைஞ்சுடுச்சுஎன்று ஊரில் தகவல் சொன்னார்கள்.
என் மாமனார் வீட்டின் கொல்லையில் சுமார் நாற்பது தென்னைமரங்கள் கஜாவால் வீழ்ந்திருக்கும். மீண்டும் இப்போது கொல்லைக்கு சென்றேன். வீழ்ந்த மரங்களின் உடல்கள் அப்படியே கிடந்தன. தொட்டுத் தொட்டுப் பார்த்தேன், மத்திய -மாநில அரசுகளைப் போலவே இருந்தன. வளைக்கப்பட்ட தென்னைகள், ஒடிக்கப்பட்ட தென்னைகள், தலைப் பகுதி திருகிப் பிய்த்து வீசப்பட்ட தென்னைகள் எல்லாம் புயல் வீசிய கணத்தை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தன தங்களுக்குள்.
நேர்ந்த துயரத்துக்கு இடையே நிமிர்ந்து பார்த்தேன். இன்ப அதிச்சி. கஜாவால் வளைத்து கிட்டத்தட்ட ஒடிக்கப்பட்டு, தலை பிய்த்து வீசப்பட்ட ஒரு தென்னையின் உச்சியில் பாளை பூத்திருந்தது.  ‘’என்ன மாமா இது?” என்றேன் ஆச்சரியமாய்.
தலையைத் திருகி போட்டாலும் பூத்திருக்கு பாத்தீங்களா... அதான் நம்பிக்கைசட்டெனச் சொல்லி கிராமத்து மனுஷன் விவரமாய் சிரித்தார். கஜா பேரழிவுக்காக கண்டம் தாண்டியெல்லாம் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால் கஜாவின் வேட்டைக் காட்டில் கஜாவை வென்று, அந்தத் தென்னைமரம் மீண்டும் தன் பாளை மூலம் சிரிக்கிறது. இது நம்பிக்கையின் குறியீடு. டெல்டா மீண்டும் எழும். புரட்டிப் போடும் புயல்களையும், புயலின் பெயரைச் சொல்லி புரட்டுகளை வீசும் பயல்களையும் தாண்டி டெல்டா எழும் என்ற நம்பிக்கை வார்த்தையை, தலை பிய்க்கப்பட்ட தென்னையில் இருந்து உயிர்த்திருக்கும் பூம்பாளை பேசுகிறது.
இப்போதெல்லாம் மனசை சில கவலைப் புயல்கள் கடக்கும்போது கண்ணை மூடி அண்ணாந்து கொள்கிறேன். என் கிராமத்துத் தென்னையின் பாளை என்னைப் பார்த்து சிரிக்கிறது, ‘எதிர்த்து நில்லுடா... பூக்கலாம். ’ என்ற வார்த்தைகளை உதிர்த்தபடி!
-ஆரா

No comments:

Post a Comment