NFTECHQ

Thursday 28 March 2019


கதவைத் தட்டும் பேரழிவு: கடலை கொல்லும் மனிதர்கள்!

கடலுக்கு ஏற்படும் அபாயம் மொத்த பூமிக்கும் ஏற்படும் அபாயம்!

எல்லையே இல்லாத ஆச்சரியங்களால் கடல்கள் நிறைந்துள்ளன. நம் பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும், மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் நம் கற்பனைக்கும் எட்டாத உயிரினங்களும் பல விந்தைகளும் புதைந்துள்ளன. இதில் என்ன நடக்கிறது என்பதையும் அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் தெரியப்படுத்த இதைவிட ஒரு முக்கியத் தருணம் வேறு இருக்க முடியாது.”
- இவ்வாறு டேவிட் அட்டன்பரோவின் வசீகரக் குரலில் தொடங்கும் பிபிசியின் தி ப்ளூ பிளானெட் – 2 (The Blue Planet : 2) ஆவணப்படம் கடந்த வருடம் பெரிதாகப் பொதுவெளிக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இயங்கிவந்த முன்னணித் திரை விநியோகஸ்தர்களின் உதவியுடன் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது. 1,406 நாட்கள் பயணமும் 6,000 மணி நேரப் படப்பிடிப்பும் ஏழு பகுதிகளைக் கொண்ட தொடராகப் பகுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் திரையிடப்பட்ட அந்தப் படத்தினைப் பார்த்தபோது மாயாஜால உலகுக்குள் சென்றுவந்ததைப் போன்ற ஓர் உணர்வு. ஆழ்கடல் அவ்வளவு அற்புதங்களைக் கொண்டதா என்று வியப்பாக இருந்தது. இயற்கை இவ்வளவு ஆச்சரியங்களைத் தன்னுள் வைத்திருப்பதைப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், தாம் செய்துவரும் சின்னச் சின்னத் தவறுகளால் அந்த அதிசயங்கள் அதிவேகமாக அழிந்துவருவதையும் பார்த்தனர்.
அதீத மீன் பிடித்தல், கட்டுப்பாடில்லாத வேட்டை, கொடூரமான அளவுகளில் கொட்டப்படும் குப்பைகள் என்று பொருளாதாரச் சுரண்டல் மற்றும் அதைச் சார்ந்த விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது கடல்.

மேற்குறிப்பிட்ட ஆவணப்படத்தின் ஒரு காட்சி இது. ஒரு தாய் திமிங்கலம் தன் இறந்த குட்டியின் உடலைப் பிரிய மனமில்லாமல் பல நாட்களாகச் சுமந்துகொண்டு அலைந்துவருகிறது. அதைப் பார்க்கும்போது அவ்வளவு கனமாக இருந்தது. அந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், திமிங்கலத்தின் தாய்ப்பாலிலிருந்த விஷம்! கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக், குப்பையால் நீரின் நச்சுத்தன்மை அதிகமானதால் தாய்ப்பால் விஷமாக மாறிவிட்டதே குட்டியின் இறப்புக்குக் காரணம் என்றது பத்திரிகைச் செய்தி.
மிகப் பெரிய அளவில் நிகழ்ந்துவரும் கடல் உயிரின உயிரிழப்புகளின் மிகச் சிறிய வெளிப்பாடு இது. இந்தச் சங்கிலி கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல; அதனைச் சார்ந்து வாழும் துருவக் கரடிகள், பெங்குயின்கள், நீர் நாய்கள், கடற்பறவைகள் போன்ற பல்வேறு விலங்குக் குழுக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் துடைத்தழித்திருக்கிறது.
கடல் உயிரிகளின் அழிவால் உணவு கிடைக்காமல் ரஷ்யாவின் ஜெம்லியா தீவுக்குள் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததும், அதை அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்ததும், பொருளாதாரத்துக்காகச் சுரண்டப்பட்ட கடல் அழிவின் நேரடி சாட்சியங்கள். மனிதச் செயல்பாடுகளின் விளைவால் கடல் அழிக்கப்படுகிறது என்பதை நிறுவுவதற்கான அறிவியல் வாதங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்ட ஆதாரங்கள் அவை.
இது அவ்வப்போது நிகழ்வதுதான் என்ற வழக்கமான வாதத்தை முன்வைத்துத் தப்பிக்க முடியாது. ஏனெனில் பனிக்கரடிகளின் இந்தப் படையெடுப்பு குறித்து அந்நகராட்சித் தலைவர் ஜிகன்ஷா முசின் கூறுகையில், 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவிலான பனிக்கரடிகள் ஊருக்குள் புகுந்ததை தான் கண்டதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காட்டுக்குப் புலி, கடலுக்குத் திமிங்கிலம்
நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கவியலாத வாழ்வியல் அற்புதங்களைக் கொண்டிருக்கிறது கடல். அந்தக் கடலை ஆள்பவை திமிங்கலங்கள். எப்படி ஒரு புலியின் இறப்பு காட்டின் ஒரு பகுதியை அழிவுக்கு வழிவகுக்குமோ அப்படியே ஒரு திமிங்கலத்தின் இறப்பும் கடலுக்கு. சமீப காலங்களில் வரலாற்றில் என்றும் பதிவு செய்யப்படாத அளவில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அவற்றால் கடலில் வாழ முடியவில்லை. அவற்றின் வாழ்விடத்தை நாம் அப்படி அசிங்கப்படுத்தியிருக்கிறோம். அவ்வளவு சீர்குலைத்திருக்கிறோம்.
திமிங்கலங்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக இறந்து போவதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம். இதை நாம் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாது. கடலின் வெப்பநிலை உயர்வு, புவி வெப்பமயமாதலால் புவியில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் கடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், குப்பைகளாலும் கழிவுகளாலும் கடலின் நீர்த்தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவைதான் திமிங்கலங்களின் இறப்புக்குக் காரணம். அவை ஒலி உணர்வின் வழி (Eco-location) வழிநடத்தப்படுபவை. சிறிய மாற்றங்கள்கூட அவற்றின் பாதைகளிலும் அன்றாடச் செயல்பாடுகளிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அப்படிப் பாதையிழந்து உணர்விழந்து தவிக்கும் திமிங்கலங்கள் கடைசியில் இறந்துவிடுகின்றன.” - இதுதான் கடல்சார் விஞ்ஞானிகளான டிபானி சுடாரியா, கில் பிரௌலிக், ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் (Dipani Sutaria, Gill Braulik, J K Patterson Edward) ஆகியோர் வெவ்வேறு தளங்களில் வெளியிட்ட ஆய்வுகளின் சுருக்கம்.
அத்தனை அழிவுகளையும் பொருளாதார வளர்ச்சி எனும் பூதத்தின் வாயில் நின்றுகொண்டு இந்த மனிதகுலம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த பூதம் மனிதகுலத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது.
வேடிக்கை பார்க்கத்தான் ஆள் இல்லை!
நன்றி  நரேஷ்