NFTECHQ

Wednesday, 10 October 2018


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்
கடந்த 6 ஆண்டுகளாகப் பண்டிகைக் காலத்திற்கு முன்பாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டும், அதே அளவு போனஸ் வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும். ஊழியருக்குத் தலா ரூ.17 ஆயிரம் வரை கிடைக்கும்.


**தகவல் பெற**
NFTE ஈரோடு மாவட்ட இணையதளத்தில் "இதைப் படிக்காதீர்கள்" என்ற தலைப்பில் தவறான பதவி உயர்வுகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளோம். மேற்கோண்டு விபரங்கள் அறிய 94430 45600 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ள்லாம்

தோழமையுடன்
G.குமார்
OS பணி ஓய்வு
ஈரோடு மாவட்ட NFTE இணையதள பராமரிப்பாளர்.


ஏழாவது பேச்சு வார்த்தை
09.10.2018 அன்று ஏழாவது ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

வீட்டு வாடகைப்படி குறித்து விவாதிக்கப்பட்டது.
வீட்டு வாடகைப்படியை முடக்குவது என்று நிர்வாகம் தெரிவித்தது.
இதை ஊழியர் தரப்பு கடுமையாக எதிர்த்தது. புதிய சம்பள விகிதத்தில் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என ஊழியர் தரப்பு வலியுறுத்தியது. மீண்டும் பேசலாம என நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, 9 October 2018


இதைப் படிக்காதீர்கள்
தபால் தந்தி காலம் தொட்டு தேர்வுகள்-பதவி உயர்வு பணிகளில் மிகக் கறாரான நிர்வாகம் என்ற நற்பெயர் பெற்றிருந்ததை பதிவிடுவதா?

மூன்று ஆண்டுகள் கூட முழுமையாகப் பணி முடிக்காத ATT (RM) கேடர் ஊழியர் 28.01.2018 அன்று நடந்த JE தேர்வில் அனுமப்திக்கப்பட்டதைப் பதிவிடுவதா?

9020-17430 என்ற சம்பள விகிதம் பற்றிய விபரத்தைக் கூட கவனிக்காத, கணக்கில் கொள்ளாத  அளவுக்குக் காரிருள் சூழ்ந்த நிலையைப் பதிவிடுவதா?

அனைத்துக்கும் அடிப்படையாம் 2013 என்ற எண் கூட கவனிக்காமல் விடப்பட்டதைதவறென்று பதிவிடுவதா? தப்பென்று பதிவிடுவதா?

2013க்கும் 2016க்கும் உள்ள பொருந்தாத பொருத்தத்தைக் கணிக்கத் தவறியதைப் பதிவிடுவதா?

இத்தனையும் நடைபெற்று பாஸ் ஆனதைப் பதிவிடுவதா?

JE பயிற்சிக்குக் கூட அனுப்பப்படலாம் என்பதைப் பதிவிடுவதா?

இனி ஒரு ப்ளாஷ் பேக்

2013ல் பரிவு அடிப்படையில் பணி நியமனம். 2016ஆம் ஆண்டு TT கேடர் காலியிடங்களுக்கு 20.08.2017 அன்று தேர்வும் எழுதியாச்சு.
எப்படி? எப்படி?
இப்படி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. எல்லாம் அனுமதியோடுதான் நடந்தது. ரிசல்ட் பாஸ்.   பயிற்சி முடிந்தது. 05.05.2018 அன்று டெலிகாம் டெக்னீசியன் என்ற பட்டமும் சூட்டப்பட்டது.

இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்ட ஊழியர் ஒருவரே. அனுமதி அளித்தவரும் ஒருவரே.

2013ல் பணி நியமனம் பெற்று 5 ஆண்டுகளில் இரண்டு பதவி உயர்வுகள். யாருக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு?

தமிழகத்தில் மண்ணைத் தோண்ட தோண்ட சிலைகள் கிடைப்பது போல் 2013 என்ற எண்ணைக் கூர்ந்து ஆராய்ந்தால் மாற்றங்கள் நிகழும்.
அவை தவறால் விளைந்ததா தப்பால் விளைந்ததா என்பது அப்போது தெரியும்.
மேலும் இதுபோன்ற பணிகளில் மிகக் கறாரான நிர்வாகம் என்ற நற்பெயருக்குக்குந்தகம் ஏற்பட்டுள்ளது வேதனைக்கும், கவலைக்கும் உரிய்தன்றோ.
அதுவும் ஈரோட்டில் என்பது???????

Sunday, 7 October 2018


இரசித்துக் கேட்ட ஒரு பாடல்
அன்றைக்கு ஒரு
நாடிருந்ததே
அந்நாட்டில்
ஆறிருந்ததே
ஆறு நிறைய
மீனிருந்ததே
மீன் முழுகிடக்
குளிருரிந்ததே
அன்றைகொரு
வயலிருந்ததே
வயல் முழுதும்
கதிரிருந்ததே
கதிர் கொத்திடக்
கிளி வந்ததே
கிளிகள் பாடும்
பாட்டிருந்ததே
அந்நாட்டில்
வெயிலிருந்ததே
மண்வழியில்
மரமிருந்ததே
மரத்தடியில் பேசிச்
சிரித்திட
நண்பர்கள் கூட்டம்
நூறிருருந்ததே
நல்ல மழை
பெய்திருந்ததே
நரகீத சூடில்லையே
தீவட்டிக்
கொள்ளையில்லையே
தின்றதெதுவும்
நஞ்சில்லையே
ஒரு வீட்டில்
அடுப்பெரிந்தால்
மறுவீட்டில்
பசியில்லையே
ஒருகண் கலங்கி
நிறைந்தால்
ஓடிவரப்
பலருண்டாமே
நாடெங்கும்
மதில்கள்
இல்லையே
நடைவெளி
இடைவெளி
நூறிருந்ததே
நாலுமணிப் பூ
இருந்ததே
நல்லோர்
செயலுக்கு
விலையிருந்ததே
அன்றும் பல மதம்
இருந்ததே
அதையும் தாண்டி
அன்பிருந்ததே
உன்னைப்
படைத்தான்
என்னைப்
படைத்தான்
என்றொரு
சண்டையில்லையே
அந்நாட்டைக்
கண்டவருண்டோ
எங்கே போனது
தெளிவுண்டோ
அந்நாடு இறந்தே
போனதோ
அது வெறும் ஒரு
கனவானதோ

இது ஒரு மளையாள மொழிப் பாடலின் தமிழாக்கம். இதைத் தந்துதவிய தோழர் மதிக்கு நன்றிகள் பல.

Friday, 5 October 2018


வள்ளலார் 196
அக்டோபர் 5  வள்ளலாரின் 196ஆவது பிறந்ததினம்.
19ஆம் நூற்றாண்டின் ஆட்சி  கருணையிலா ஆட்சிஎன்கிறார் வள்ளலார்.
பசுக்களைக் கொன்று யாகம் வளர்த்தலில் வள்ளலாருக்கு உடன்பாடில்லை.  ஜீவகாருண்யம் என்ற உயிரிரக்கக் கோட்பாட்டை வள்ளலார் வலியுறுத்தினார். 19ஆம் நூற்றாண்டை பஞ்சம் தாக்கியபோது வள்ளலார் பசியால் வீடுதோறும் இரந்து உண்ணும் வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்களைக்  கண்டு உளம்பதைத்துதான் பசியால் ஏற்படும் துன்பங்களைப் பட்டியலிட்டு இதனைப் போக்கினால்தான் உயிர் இரக்கம் பற்றிய சிந்தனைக்கு மனித மனம் ஈடுபடும் என்றார். கருணையே இல்லாத காலனிய ஆட்சியில் எவரும் கண்டுகொள்ளாத மக்களுக்காகக் கவலைப்பட்டு அவர்களது பசியைப் போக்க ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துகிறார்.
உண்பதற்கு உணவில்லை; உடுப்பதற்கு நல்ல கூரை இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உழுவதற்கு நிலமில்லை; விரும்பியபடி செய்ய பொருள் இல்லை. இப்படித் துன்பப்படுகின்ற ஜீவன்களிடம் ஜீவகாருண்யமே காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.
ஜீவகாருண்யம் என்பது மனிதர்களிடத்து மட்டும் அல்லாது உயிருள்ள எல்லா ஜீவன்களிடத்தும் பரவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்..
எதிர்ப்பு தெரிவிக்காத ஜீவன்களைப் பலியிட்டுதான் வழிபாடு நிகழ்த்த வேண்டும் என்பதல்ல; பலியிடாமல் வழிபடப் பூசணிக்காய் கீறல் போன்றவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியும் உள்ளார்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் கூடாது என்றும், இறந்தோருக்குச் சடங்குகள் செய்வதோ, கணவன் இறந்தால் மனைவிக்குத் தாலி வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
காலம்காலமாகப் பின்பற்றும் சடங்குகளினால் ஏற்படும் மனத்தாக்கங்கள் பல்வேறு இழப்புகளுக்குக் காரணமாகின்றன. ஆகவே, அவற்றை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமது ஒரே நெறியானஅருள்நெறிஉலகமெல்லாம் பரவ வேண்டும் என்று விரும்பினார்.
மக்கள் அனைவரும் நம்மேல் தொடுக்கப்படும் பிரிவினை அம்புகளைக் கருத்தில்கொள்ளாமல் வள்ளலார் கூறிய எளிய வழியான உயிர் இரக்கமாகிய ஜீவகாருண்ய நெறியில் அருள்நெறி பின்பற்றி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
என்று கூறும் வள்ளலார், என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று தெளிவுபடுத்துகின்றார்.
அருள்நெறி என்பதும் சன்மார்க்க நெறி என்பதும் அன்பு; தயவு; கருணை முதலியன அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய வழிகள்தான். அதனால் உயிர்சுழற்சி இயல்பாய் நடைபெறும்; எவரும் எவரையும் தாக்கி அழிக்க மனம் வராது. உணவுக்காகவோ, பகைக்காகவோ எந்த உயிரையும் கொல்லாமல் அருள்நெறியோடு உலக உயிர்களெல்லாம் சன்மார்க்க நெறியில் சிறந்து வாழ வள்ளலாரின் 196ஆம் அகவை நாளில் சூளுரைப்போம்; பின்பற்றுவோம்.

Wednesday, 3 October 2018


எம்.பி.க்களுக்கு  4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம்!

எம்.பி.க்களுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.. மூலம் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுட் என்பவர் கடந்த 4 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து நாடாளுமன்ற செயலாளரிடம் ஆர்.டி..யின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தற்போது மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் நியமன எம்.பி.கள் இருவர் தவிர்த்து 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.
மக்களவை எம்.பி. ஒருவருக்குச் சராசரியாக ஆண்டுக்கு 71 லட்சத்து 29 ஆயிரத்து 390 ரூபாய் ஊதியமாகத் தரப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி. ஒருவருக்கு 44 லட்சத்து 33 ஆயிரத்து 682 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1,554 கோடி ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 443 கோடி ரூபாய் ஊதியமாக 4 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான ஜகதீஷ் சொக்கர் இது குறித்து கூறுகையில், “எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதியம் இறுதி செய்வது போல், எம்.பி.க்களின் ஊதியம், சலுகைகள் போன்றவை வெளிப்படையாக, நாட்டின் செலவுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களின் மாத ஊதியத்தை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகள் கழித்து 2023இல் மீண்டும் மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.