NFTECHQ

Thursday, 26 March 2015

நீரின்றித் தள்ளாடும் இந்தியா


அதிகரிக்கும் நீர்த் தேவை வரலாறு காணாத பஞ்சத்தில் இந்தியாவைத் தள்ளிவிடக் கூடும்.
இந்தியாவில் நீர் தொடர்புடைய சண்டைகள் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பதற்குத் நீர் இல்லை என்ற அவல நிலையுடன், விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நீரை மற்ற துறைப் பயன்பாட்டுக்குத் திருடுவதும் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நீருக்காக விவசாயிகள் கொலைகூடச் செய்யப்பட்டுள்ளார்கள்.
மத்திய நீர்வள அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஓர் ஆண்டில் பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு 11,21,000,00,00,000 கன மீட்டர். இவற்றில் 6,90,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு மேற்பகுதியிலுள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் மூலமாகவும், 431,000,00,00,000 கன மீட்டர் நீரைப் பூமிக்கு அடியிலிருந்து கிணறுகள் மூலமாக எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால், தொடாந்து அதிகரித்துவரும் மக்கள்தொகையாலும், விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் வேகமான மாற்றங்களாலும், நீரின் தேவை பல மடங்கு உயாந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மத்திய நீர்க் குழுமம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தத் நீர்த் தேவை, நம் நாட்டின் நீர் இருப்பைவிட அதிகரித்துவிடும். அப்படியென்றால், நம் நாட்டில் தற்போது நீர்ப் பஞ்சம் இல்லை என்று அர்த்தமில்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பகுதிகளிலும் தற்போதே நீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பதே உண்மை. எங்கெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்காக ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய 1,700 கன மீட்டர் நீரைவிட குறைவாக நீர் கிடைக்கிறதோ அங்கே நீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம். இதன்படி, இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 76% மக்கள் நீர்ப் பஞ்சத்தில் உள்ளார்கள். அதாவது, மத்திய நீர்க் குழுமத்தால் மொத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ள 20 பெரிய ஆற்றுப் படுகைகளில், வெறும் 9 படுகைகளில் வசிப்பவர்கள் மட்டும்தான் தற்போது நீர்ப் பஞ்சத்தைச் சந்திக்காமல் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மை. தமிழகத்தில் ஒரு ஆண்டில் சராசரியாக தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு வெறும் 750 கனமீட்டர் என்பது மேலும் அதிரவைக்கிறது.
துறைவாரியான நீர்ப் பயன்பாடு
இந்தியாவில் தற்போது மொத்தமாகப் பயன்படுத்தப் படும் 6,34,000,00,00,000 கன மீட்டர் நீரில், ஏறக்குறைய 85% விவசாயத்துக்கும், 7% வீட்டு உபயோகத்துக்கும், 2% தொழிற்சாலைகளுக்கும், மீதம் இதரப் பயன் பாட்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் 2050 ஆண்டு வாக்கில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நீரின் மொத்தத் தேவை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. விவ சாயத் துறையில் நீரின் பயன்பாடு 85%-லிருந்து 74% ஆகக் குறைந்து, தொழில் மற்றும் இதரப் பயன்பாடு களின் அளவு பன்மடங்காக அதிகரிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரின் தேவை ஒவ்வொரு துறையிலும் பன்மடங்கு அதிகரிக்கப்போகிறது என்பது தான் இந்தப் புள்ளிவிவரங்கள் தரும் கடுமையான எச்சரிக்கை.
மீள்வது எப்படி?
இரண்டு வகையான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நீர் ஆதாரத்தைப் பெருக்குவது, மற்றொன்று நீரைச் சேமித்துத் தட்டுப்பாட்டைப் போக்குவது. அணைகள் கட்டியும், புதிய குளங்களை வெட்டியும், ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தும் நீர் ஆதாரங்களின் கொள்ளளவை உயர்த்தலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், நீரின் கொள்ளளவை நினைத்த போதெல்லாம் உயர்த்த எந்த மாநிலத்திலும் முடியாது. ஒரு நாட்டின் மொத்த சாத்தியமான நீரின் அளவு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். அதை மீறி அணைகள் கட்டுவதால், பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் அது உகந்ததாக அமையாது.
நீரைச் சேமிக்க நடவடிக்கை வேண்டும்
குறைந்து வரும் சாத்தியமான நீரளவைக் கருத்தில் கொண்டு, நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டியது தற்போது அவசியம்.
ஏறக்குறைய 85% நீரைத் தற்போது பயன்படுத்திவரும் விவசாயத் துறையில், நீரைச் சேமிக்க பல்வேறு முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் பழங்கால பாசன முறையில் நீர் உபயோகத் திறன் வெறும் 35% - 40% என்று கணக்கிடப்பட்டுள்ளது. நீரை வாய்க்கால் மூலமாகப் பயிர்களுக்கு நிலம் முழுவதும் கொடுப்பதால் ஏறக்குறைய 60% நீர் பல்வேறு வழிகளில் வீணாக்கப்படுகிறது. ஆனால், புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முறைகளின் மூலமாகக் குறைந்த பட்சம் 50% நீரைச் சேமிக்க முடிவதோடு 40% - 60% வரை அதிக மகசூலும், குறைந்த சாகுபடிச் செலவும், மின்சார சேமிப்பும் சாத்தியமாகும்.
நுண்நீர்ப் பாசனத் திட்டம்
மத்திய வேளாண் அமைச்சகத்தால் 2004-ல் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் அமைக்கப்பட்ட நுண்நீர்ப் பாசனத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற் கான குழுவின் மதிப்பீட்டின்படி, குறைந்தது 85 பயிர்களை இந்த நீர்ப் பாசன முறையின் கீழ் இந்தியாவில் லாபத்துடன் பயிர்செய்ய முடியும் என்றும், ஏறக்குறைய 7 கோடி ஹெக்டேர்கள் சாத்தியமான பரப்பளவாக இந்தியாவில் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், தற்போது ஏறக்குறைய 40 லட்சம் ஹெக்டேர்கள் மட்டுமே இந்த நவீனப் பாசன முறையைப் பயன்படுத்திவருகின்றன. இந்தப் பரப்பளவை அதிகரித்து, நீரைச் சேமிக்க முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இந்தியாவில் தற்போதுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பான 9.2 கோடி ஹெக்டேரில், நிலத்தடி நீர்ப் பாசனத்தின் பங்கு ஏறக்குறைய 65%. நிலத்தடி நீர் தற்போது கட்டுப்பாடில்லாமல் உறிஞ்சப்படுவதால் நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளும் அதனால் ஏற்படுகிறது. மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைகள் இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளன. ஆகவே, நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, திறனற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தினால், நீரைச் சேமித்து நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.
வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால், மழையளவு குறைந்து தற்போது நிலவிவரும் நீர்ப் பஞ்சம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுமார் 125 கோடி மக்கள்தொகையுடன், விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள நம் நாட்டில், அதிகரித்து வரும் நீர்த் தட்டுப்பாடு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை பெரிய அளவில் ஏற்படுத்திவிடும். நீர்த் தட்டுப்பாடு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வறுமையை அதிகரித்துவிடும். நீர் ஆதாரத்தைப் பெருக்கி நீர்த் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. நீர்த் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்குக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை கள் மூலமாக முடிந்த அளவில் நீரைச் சேமித்து வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

- அ. நாராயணமூர்த்தி, துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்

Monday, 23 March 2015

பகத்சிங்

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் சாஹீது (மாவீரன்) பகத்சிங்என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுஅமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
 ‘சாஹீது பகத்சிங்என அழைக்கப்படும் பகத்சிங்அவர்கள், 1907  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27  ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள பங்காஎன்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.
விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த சௌரி சௌராவன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!என முடிவுக்கு வந்தார். 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம்என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து நவ்ஜவான் பாரத் சபாஎன்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.
லாகூர் கொலை வழக்கு
1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனைஎதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு தொழில் தகராறு சட்ட வரைவுஎன்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். 
இறப்பு
சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத்என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

Wednesday, 11 March 2015

பிஎஸ்என்எல் சொத்து மதிப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10.03.2015 மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்
முதல் பத்து இடங்களில் இந்திய நிறுவனங்கள் விவரம் வருமாறு:
ரிலையன்ஸ் ரூ. 3,67,583 கோடி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ.2,52,413 கோடி),
ஹெச்டிஎப்சி (ரூ. 2,25,757 கோடி),
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ரூ. 1,94,164 கோடி),
என்டிபிசி லிமிடெட் (ரூ. 1.79,554 கோடி),
ஆர்இசிஎல் (ரூ. 1.52,852 கோடி),
பவர் கிரிட் கார்ப்பரேஷன் (ரூ. 1,39,589 கோடி), எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (ரூ. 95,777 கோடி),
 செயில் (ரூ. 91,961 கோடி),

 பிஎஸ்என்எல் (ரூ. 89,333 கோடி).

விற்கத் துடிக்கும் அரசு

நஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்., ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் உள்ளிட்ட 65 பொதுத் துறை நிறுவனங்களில், 65 நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் அனந்த் கீதே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. அதில், கைக்கடிகாரம், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் 3 பிரிவுகள் அடங்கும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தானாக ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் உரிய நிதி பெற்றுக் கொண்டு ஒய்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது என்றார்.
எனினும், மூடப்படவுள்ள பிற பொதுத் துறை நிறுவனங்களின் பெயர்களை மத்திய அமைச்சர் அனந்த் கீதே வெளியிடவில்லை.
மானிலங்க்கள் நட்டத்தில் இயங்கினால் அவற்றை விற்பார்களோ?

இந்தியா நடத்தில் இயங்கினால் இந்தியவையும் விற்பார்களோ?

Saturday, 7 March 2015

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களிலேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.


கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி! 


ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.  


மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட்டோமென்று கும்மியடி!  


நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.  


கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.  


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! 


வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.


காதலொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!   

Tuesday, 3 March 2015

தோழன் P.ஜெயராமன்

ஈரோடு மாவட்டத்தில் NFPTE/NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகச் சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்பட்ட அன்புத் தோழன் P.ஜெயராமன் அவர்களுக்கு 26.02.2015 அன்று பணி நிறைவு பாராட்டு விழா 26.02.2013 சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் மாலி, செல்வராஜன், பங்காரு, யாசின், லாசர், குல்சார் வாழ்த்துரை வழங்கினர்.
உணசர்ச்சி மிக்க ஏற்புரையை தோழர் P. ஜெயராமன் நல்கினார்.
அவர் பல்லாண்டு வாழ்க பயனுற வாழ்க நலமுடன் வாழ்க

மகிழ்வுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.
Sunday, 1 March 2015

வேலை நிறுத்த மாற்றம்

மார்ச் 17 முதல் நடைறுவதாக அறிவிக்கப்பட்ட்டிருந்த்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 21,22 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன?

தெளிவான விபரங்கள் பிறகு.

என்ன அது 4,44,200

80 சி -   ரூ.1.5 லட்சம்
80
சிசிடி - ரூ.50 ஆயிரம்
வீட்டுக்கடன் மீதான வட்டி கழிவு - ரூ. 2 லட்சம்.
80
டி சுகாதார காப்பீடு - ரூ.25 ஆயிரம்
போக்குவரத்து படி சலுகை - ரூ.19 ஆயிரத்து 200

ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 200 ஆகும்.

தாத்தாவின் கடைசி ஆசை:

தான் எழுதிய படுகளத்தில் பாரத தேவி நூலை வண்ணப் பிரதியாக பதிப்பிக்க வேண்டும் என்பது தியாகி ஐ.மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை. பொருளாதார நெருக்கடியால் அந்த ஆசை நிறைவேறாமலேயே கண்ணை மூடிவிட்டார்.
சாமானியருக்கும் சுதந்திர வேட்கையை தூண்டும் மாயாண்டி பாரதியின் கட்டுரைகள் அடங்கிய நூல் படுகளத்தில் பாரத தேவி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து 2-ம் பதிப்பை வெளியிட்டாலும், இந்த நூலை வண்ணப் பதிப்பாக வெளியிட ஆசைப்பட்டார். இதற்காக இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து அட்டையில் சிறு மாற்றம் செய்து, கூடுதல் பக்கங்களுடன் 3-ம் பதிப்பை தயார் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் இல்லாததால் அச்சகத்தில் தேங்கிக் கிடக்கிறது மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை.
இதுகுறித்து மாயாண்டி பாரதியின் பேத்தி கலாபாரதி தி இந்து-விடம் கூறியதாவது:
சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது மதுரை ரேஸ் கோர்ஸில் தாத்தாதான் தேசியக் கொடி ஏற்றுவார். இந்த குடியரசு தினத்துக்கும் அவருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் ஆட்சியர். எப்போது விடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து குளிக்கப் போய்விட்டார். குளித்துவிட்டு வரும்போது தடுமாறி விழுந்ததில் தோள் பட்டை எலும்பு முறிந்துவிட்டது. அதனால் கொடியேற்றப் போகமுடியவில்லை. அத்தோடு படுத்த படுக்கையாகி விட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, படுகளத்தில் பாரத தேவி புத்தகத்தை என் கண்ணை மூடுவதற்குள் கலரில் பார்த்துவிட வேண்டும். மதுரையில் பாரத மாதாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய இரண்டைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா. படுகளத்தில் பாரத தேவி புத்தகத்தை தாத்தா காசுக்கு விற்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் இலவசமாகத்தான் கொடுத்தார்.
புத்தகத்தை வண்ணப் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க 40 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். அவ்வளவு பணம் இல்லாததால் புத்தகத்தை வெளிக் கொண்டுவர முடியவில்லை. தாத்தாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் பத்திரிகையாளர் பென்ஷனும் சேர்த்து மொத்தம் 27,500 ரூபாய் வந்து கொண்டிருந்தது.
மருந்து செலவு, சாப்பாட்டுச் செலவு போக எஞ்சிய பணத்தை தன்னைத் தேடிவரும் இயலாதவர்களுக்கும் தாத்தா கொடுத்துவிடுவார். தீக்கதிர் மணி என்பவரின் தங்கை மகளை தனது செலவில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். மதுரை அருகே நிலையூரில் தியாகிகளுக்காக இரண்டரை சென்ட் இடம் கொடுத்தது அரசு. அந்த இடத்தை தியாகிகள் நூலகம் அமைக்க இலவசமாக கொடுத்துவிட்டார் தாத்தா.
வாடிப்பட்டி அருகே தெத்தூரில் 1970-ல் தாத்தாவுக்கு அரசு கொடுத்த ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அவரது கடைசி ஆசைப்படி அங்கே பாரதமாதா மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, படுகளத்தில் பாரத தேவி நூலின் வண்ணப் பதிப்பை வெளிக் கொண்டுவரவும் யாராவது உதவி செய்ய வேண்டும் என்று கண்கலங்கினார் கலாபாரதி.