NFTECHQ

Sunday 16 August 2015

பொதுத்துறை வங்கிகளில் தனியார் வங்கி அதிகாரிகள் நியமனம்



தனியார் வங்கி அதிகாரிகளை பொதுத்துறை வங்கித் தலைவர்களாக நியமிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கித் துறையில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் சில சீர்த்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக மத்திய நிதியைமச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் துறை வங்கிகளில் தலைமை பதவி வகித்தவர்களை பொதுத்துறை வங்கிகளில் மேலாண்மை இயக்குனர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். பொதுத்துறை வங்கிகள் பொதுமக்களுடைய சேமிப்பை நிர்வகிக்கும் மிகப் பெரிய நிதி அமைப்பாகும். பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்களுடைய வைப்புத் தொகை ரூ.66 லட்சம் கோடி உள்ளது.
மேலும், பொதுத்துறை வங்கிகள் லாபத்தை ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படவில்லை. மாறாக, சமூக நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைமை பதவிகளுக்கு தனியார் வங்கிகளில் இருந்து அதிகாரிகளை நியமிக்கும் போது பொதுத்துறை வங்கிகள் தனது குறிக்கோளுடன் செயல்பட முடியாது. அத்துடன், பொதுத்துறை வங்கிகளிலேயே அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்படும்.
கடந்த மார்ச் 31-ம் தேதி நிலலவரப்படி, வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதைத் தவிர, 530 கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் தொகை ரூ.4.03 லட்சம் கோடியாக உள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் மூலம் பெறப்பட்ட வாராக் கடன் அளவு ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளைக் கண்டித்து விரைவில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்று வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
முன்னதாக, ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கி வாரிய தலைமையிடம் (Bank Board Bureau), நிதி, கடன் நெருக்கடியைக் குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திர தனுஷ் (Indradhanush) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஐந்து பொதுத்துறை வங்கிகளுக்கான தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறிவித்தார். பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலைவராக மைக்ரோசாப்ட் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
ஐந்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு தலைமைச் செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல் முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment