NFTECHQ

Friday 27 February 2015

நல்லகண்ணுவுக்கு விருது



அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையாக தொண்டாற்றியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோருக்கு தலா ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள காயிதே மில்லத் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை இந்த ஆண்டு முதல் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிப்பவர்களுக்கு விருதுகள் வழங்குகிறது. முதல் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளரான தீஸ்டா செடல்வாட் ஆகியோர் பெறுகின்றனர்.
இது தொடர்பாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் எஸ்.ஐ.இ.டி அறக்கட்டளையின் தலைவர் மூசா ராசா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.வசந்தி தேவி, டாக்டர்.தேவசகாயம், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். தேர்வுக் குழுவினர் இரண்டு முறை கூடி, விருது பெறுபவர்களை இறுதி செய்தனர்.
ஜனநாயக மாண்புகளை பாதுகாப்பதற்காக 90வது வயதிலும் ஓயாது போராடி வரும் அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமைகள் எந்த வகையில் மீறப்பட்டிருந்தாலும் அதை எதிர்த்து போராடி வருபவரான நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்என்ற அமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் ஆகியோர் இந்த ஆண்டின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தலா ரூ.2.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment