NFTECHQ

Wednesday 3 October 2018


எம்.பி.க்களுக்கு  4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம்!

எம்.பி.க்களுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.. மூலம் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுட் என்பவர் கடந்த 4 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து நாடாளுமன்ற செயலாளரிடம் ஆர்.டி..யின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தற்போது மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் நியமன எம்.பி.கள் இருவர் தவிர்த்து 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.
மக்களவை எம்.பி. ஒருவருக்குச் சராசரியாக ஆண்டுக்கு 71 லட்சத்து 29 ஆயிரத்து 390 ரூபாய் ஊதியமாகத் தரப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி. ஒருவருக்கு 44 லட்சத்து 33 ஆயிரத்து 682 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1,554 கோடி ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 443 கோடி ரூபாய் ஊதியமாக 4 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான ஜகதீஷ் சொக்கர் இது குறித்து கூறுகையில், “எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதியம் இறுதி செய்வது போல், எம்.பி.க்களின் ஊதியம், சலுகைகள் போன்றவை வெளிப்படையாக, நாட்டின் செலவுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களின் மாத ஊதியத்தை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகள் கழித்து 2023இல் மீண்டும் மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment