NFTECHQ

Friday 5 October 2018


வள்ளலார் 196
அக்டோபர் 5  வள்ளலாரின் 196ஆவது பிறந்ததினம்.
19ஆம் நூற்றாண்டின் ஆட்சி  கருணையிலா ஆட்சிஎன்கிறார் வள்ளலார்.
பசுக்களைக் கொன்று யாகம் வளர்த்தலில் வள்ளலாருக்கு உடன்பாடில்லை.  ஜீவகாருண்யம் என்ற உயிரிரக்கக் கோட்பாட்டை வள்ளலார் வலியுறுத்தினார். 19ஆம் நூற்றாண்டை பஞ்சம் தாக்கியபோது வள்ளலார் பசியால் வீடுதோறும் இரந்து உண்ணும் வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்களைக்  கண்டு உளம்பதைத்துதான் பசியால் ஏற்படும் துன்பங்களைப் பட்டியலிட்டு இதனைப் போக்கினால்தான் உயிர் இரக்கம் பற்றிய சிந்தனைக்கு மனித மனம் ஈடுபடும் என்றார். கருணையே இல்லாத காலனிய ஆட்சியில் எவரும் கண்டுகொள்ளாத மக்களுக்காகக் கவலைப்பட்டு அவர்களது பசியைப் போக்க ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துகிறார்.
உண்பதற்கு உணவில்லை; உடுப்பதற்கு நல்ல கூரை இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உழுவதற்கு நிலமில்லை; விரும்பியபடி செய்ய பொருள் இல்லை. இப்படித் துன்பப்படுகின்ற ஜீவன்களிடம் ஜீவகாருண்யமே காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.
ஜீவகாருண்யம் என்பது மனிதர்களிடத்து மட்டும் அல்லாது உயிருள்ள எல்லா ஜீவன்களிடத்தும் பரவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்..
எதிர்ப்பு தெரிவிக்காத ஜீவன்களைப் பலியிட்டுதான் வழிபாடு நிகழ்த்த வேண்டும் என்பதல்ல; பலியிடாமல் வழிபடப் பூசணிக்காய் கீறல் போன்றவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியும் உள்ளார்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் கூடாது என்றும், இறந்தோருக்குச் சடங்குகள் செய்வதோ, கணவன் இறந்தால் மனைவிக்குத் தாலி வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
காலம்காலமாகப் பின்பற்றும் சடங்குகளினால் ஏற்படும் மனத்தாக்கங்கள் பல்வேறு இழப்புகளுக்குக் காரணமாகின்றன. ஆகவே, அவற்றை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமது ஒரே நெறியானஅருள்நெறிஉலகமெல்லாம் பரவ வேண்டும் என்று விரும்பினார்.
மக்கள் அனைவரும் நம்மேல் தொடுக்கப்படும் பிரிவினை அம்புகளைக் கருத்தில்கொள்ளாமல் வள்ளலார் கூறிய எளிய வழியான உயிர் இரக்கமாகிய ஜீவகாருண்ய நெறியில் அருள்நெறி பின்பற்றி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
என்று கூறும் வள்ளலார், என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று தெளிவுபடுத்துகின்றார்.
அருள்நெறி என்பதும் சன்மார்க்க நெறி என்பதும் அன்பு; தயவு; கருணை முதலியன அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய வழிகள்தான். அதனால் உயிர்சுழற்சி இயல்பாய் நடைபெறும்; எவரும் எவரையும் தாக்கி அழிக்க மனம் வராது. உணவுக்காகவோ, பகைக்காகவோ எந்த உயிரையும் கொல்லாமல் அருள்நெறியோடு உலக உயிர்களெல்லாம் சன்மார்க்க நெறியில் சிறந்து வாழ வள்ளலாரின் 196ஆம் அகவை நாளில் சூளுரைப்போம்; பின்பற்றுவோம்.

No comments:

Post a Comment