NFTECHQ

Wednesday 3 October 2018


தியாகம்

தியாகம் என்ற வார்த்தைக்கு, இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறையினரின் அகராதியில் அர்த்தம் கிடையாது. அதற்கென்று எந்த விலையும் கிடையாது. அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, இன்று பலரது எண்ணமாக உள்ளது. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாதவர்களாகவும், அப்பாவிகளாகவும், மனநலம் குன்றியவர்களாகவும், இயலாமைகளைப் பொதுவில் மறைப்பவர்களாகவும் மட்டுமே, தியாகம் புரிந்தவர்கள் இன்றைய சமூகத்தில் மரியாதை பெறுகின்றனர்.
அடியும் உதையும் இல்லாமல் குழந்தைப் பருவத்தைக் கடப்பது, ஒரு தலைமுறையின் எண்ணத் தொடர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றம் என்பது இப்போது யாருக்கும் புரிவதில்லை. முந்தைய தலைமுறையின் கணக்கிலடங்கா தியாகங்களால் தான் இன்றைய சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.
அடுத்தவரின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பதில் இருந்து தொடங்குகிறது தியாகத்தின் பயணம். பட்டினி கிடந்து குழந்தைகளின் பசியாற்றிய பெற்றோர் குறித்த விவரணைகள், இன்று பலருக்குக் கட்டுக்கதை தான். தான் பறிகொடுத்த கல்வியைத் தனது மக்கள் பெறவேண்டும் என்று ஒருவர் விரும்புவது, மற்றவர்க்கு இன்று இயலாமையாக மட்டுமே தெரிகிறது. வெறுமனே தலைமுறை இடைவெளி என்று இதனைக் கடந்துவிட முடியாது. அப்படிக் கடந்து செல்கிறோம் என்றால், எண்ணற்ற தியாகிகள் மனங்களைச் சிதைத்துப் போகிறோம் என்பதே உண்மை.

No comments:

Post a Comment