NFTECHQ

Monday 1 October 2018


அக்டோபர் 2
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம்
அண்ணலின் பெயரை அரசியல் சூதாட்டத்துக்கும் பயன்படுத்துவோர் மலிந்து விட்ட சூழல் இது. இச்சூழலில் அண்ணல் காந்தியடிகள் குறித்து இந்து தமிழ் இதழின் பதிவு இது.

தனது மனைவி கஸ்தூரிபாய் ஆஸ்ரம விதிமுறைகளுக்கு மாறாக 4 ரூபாயை மறைத்து வைத்திருந்தால் கோபப்பட்டு, நவஜீவன் பத்திரிகையில் தனது மனைவியின் செயலைக் குறிப்பிட்டு கட்டுரைஎழுதியுள்ளார்.
எப்போதும் நீதியையும், நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் ஒழுங்கையும், சுயஒழுக்கத்தையும் கடைப்பிடித்த மகாத்மா காந்தி, தனது மனைவி சிறிய தவறு செய்தபோதிலும் கூட அதை கட்டுரையில் குறிப்பிட்டு வருந்தினார்.
  
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாளை உலகம் முழுவதும் இந்தியர்கள் மட்டுமின்றி, அகிம்சையை விரும்புபவர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அண்ணல் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு கூறலாம்.
கடந்த 1929-ம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய “நவஜீவன்” வாரப் பத்திரிகையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். “எனது சோகம், எனது அசிங்கம்” என்ற தலைப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள காந்தியின் ஆசிரமத்தில் நடந்த சம்பவத்தை காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையின் முழு தாத்பரியமே, உண்மையையும், நீதிநெறிமுறைகளையும் தான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதையும், தனது விளக்கத்தையும் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து பல்வேறு பெருமைகளையும் கூறும் மகாத்மாகாந்தி, அவர் செய்த தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை, அதை தவறு என்றும் உச்ச கட்டமாக “திருட்டு” என்றும் வன்மையாகச் சாடியுள்ளார்.
ஆசிரம விதிப்படி பணத்தை யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆசிரமத்துக்கு வந்து காந்தியையும், அவரின் மனைவி கஸ்தூரிபாயையும் சந்திக்க வருபவர்கள் கொடுக்கும் பரிசுகள், பணம் ஆகியவற்றை ஆசிரமத்துக்கு கொடுத்துவிட வேண்டும். எந்தப் பொருட்களையும் பணத்தையும் சொந்த பயன்பாட்டுக்குவைத்துக் கொள்ளக்கூடாது. திருடர்கள் ஆஸ்ரமத்துக்கு வந்தால்கூட ஏதும் இல்லை என்று ஏமாற்றமடைந்து செல்லவேண்டும். அதுபோன்று ஆசிரமம் அமைந்திருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார்.
ஆனால், கஸ்தூரிபாயோ காந்திக்கு தெரியாமல் நூறு ரூபாயை மறைத்து வைத்திருந்தார். ஒரு நாள் திருடன் காந்தியின் அறைக்குள் நுழைந்துவிட்டான். ஆனால், காந்தி திருடன் நுழைந்துவிட்டான் என்றுசொன்னதும் அவர் பதற்றப்படாமல் இருக்க, கஸ்தூரிபாய் பதற்றத்துடன் இருந்தார். எந்தவிதமானபொருளும், பணமும் இல்லாதவர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்று காந்தி சிந்தித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரமத்துக்கு வந்து சென்றவர்கள் சிலர் அளித்த 4 ரூபாயையும் கஸ்தூரிபாய்ஆசிரமத்தில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு மகாத்மா காந்தி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி எழுதியிருப்பதாவது
எனது மனைவியிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருக்கின்றன. அதேசமயம், தவறான குணம் இருப்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆசிரம விதிப்படி ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்கள் யாரும் கையில் பணம் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பது ஆசிரம விதிக்கு முரணானது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரிபாய் தன்னிடம் 200 ரூபாய் வரை வைத்திருந்தார். இந்த பணம் அனைத்தும் ஆஸ்திரமத்துக்கு வருபவர்கள் பரிசாக அளித்தது. ஆனால், இந்த பணத்தை அவர் ஆசிரமத்துக்கு அளிக்காமல் தன்னிடமே மறைத்து வைத்திருந்தார்.
ஒருநாள் எங்களுடைய ஆசிரமத்துக்கு ஒரு திருடன் வந்து என் அறைக்குள் நுழைந்துவிட்டான். அங்கு என்ன பணமா இருக்கப் போகிறது என்று நான் அமைதி காத்தேன். அந்தத் திருடன் எதையும் எடுத்துச்செல்லவில்லை. ஆனால், என் மனைவியோ பதற்றத்தோடு இருந்தார். நான் அப்போதே என் மனைவி கடமையில் இருந்து தவறிவிட்டதை கண்டுபிடித்துவிட்டேன்.
மற்றொரு சமயம், சிலர் ஆசிரமத்துக்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டு கஸ்தூரிபாவிடம் 4 ரூபாயை அளித்தார்கள். ஆனால், அந்த பணத்தையும் கஸ்தூரிபா ஆசிரம அலுவலகத்திடம் ஒப்படைக்காமல், தானே வைத்துக் கொண்டார்.
என்னைப் பொருத்தவரை என் மனைவி செய்தது “திருட்டு” என்று குறிப்பிடுவேன். ஆசிரமத்தில் இருந்தவர்களில் ஒருவர் கஸ்தூரிபாவி்ன் செயலைக் குறிப்பிட்டார். அதன்பின் கஸ்தூரிபா தன்னிடம் இருந்த பணத்தை ஆசிரமத்துக்கு அளித்திவிட்டு வருத்தம் தெரிவித்து, இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தார்.
கஸ்தூரிபாய் தான் செய்த தவற்றுக்கு வருந்தினார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடந்தால், நான் ஆஸ்திரமத்தை விட்டும், என்னை விட்டும் விலகிச் சென்றுவிடுவதாகத் தெரிவித்தார். கஸ்தூரிபாவின் உறுதிமொழியை ஆசிரமத்தில் உள்ளவர்கள் ஏற்றனர்.
இறுதியாக நான் சொல்வது என்னவென்றால், என் கடமையை நான் செய்யாவிட்டால் கூட அது கடமை தவறியது என்றுதான் அர்த்தம்.
இவ்வாறு மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மனைவி செய்த தவறாக இருந்தாலும் அதை மறைக்க வேண்டும் என்ற துளி எண்ணமும் இல்லாமல், தனது கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டு கூறி பரிசுத்தமானவர் மகாத்மா காந்தி என்பதில் சந்தேகமில்லை. தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் வாழும் வரைக்கும் ஒழுக்க நெறி மாறாமல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை விரும்பினார்.



No comments:

Post a Comment