NFTECHQ

Wednesday 30 May 2018


காணாமல் போகும் வங்கிகள்

மிக மோசமான வருவாய் இழப்பையும், வாராக் கடன் பிரச்சினைகளையும் சந்தித்துவரும் இந்திய வங்கிகள் சில இத்துறையில் நீண்ட நாள்கள் நீடிப்பது கடினமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான எஸ்.எஸ்.முந்த்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அதில் பாதி அளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, இவ்வங்கிகள் தங்களது மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து இயங்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது சரியான முடிவாக இருக்காதுஎன்று கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்பது வங்கிகள் வாராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டுமே சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30ஆம் தேதி ரூ.6.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பு அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறதுஎன்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment