NFTECHQ

Tuesday 29 May 2018


பதஞ்சலி சிம் கார்டு அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்யேக சிம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு வகையான நுகர்பொருட்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவரும் பதஞ்சலி நிறுவனம், இத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இத்துறை மட்டுமல்லாமல் ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் களம்கண்டுள்ள பதஞ்சலி தொலைத் தொடர்புத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மே 27ஆம் தேதி ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதஞ்சலி நிறுவனரும், அதன் விளம்பரத் தூதருமான யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பிரத்யேகசுதேசி சம்ரிதிசிம் கார்டை அறிமுகப்படுத்தினார்.
பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள இந்த சிம் கார்டு சேவை துவக்கத்தில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், பின்னர் நாடு முழுவதும் இதன் சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் பாபா ராம்தேவ் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சிம் கார்டு கவுன்ட்டர்கள் இருப்பதாகவும், அங்கு கூடிய விரைவில் பதஞ்சலி சிம் கார்டுகள் கிடைக்கும் எனவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். ரூ.144 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புச் சலுகையுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் பதஞ்சலி சிம் கார்டுகளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பதஞ்சலி சிம் கார்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகளை 10 சதவிகிதத் தள்ளுபடியில் பெறலாம் எனவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment