NFTECHQ

Friday 27 January 2017

பேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக புதியதோர் இணையம் செய்வோம்! 


தை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத் தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook - Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.

அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் 'sino weibo' என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

 மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று

அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்.
எதிர்பார்ப்புகளோடு...
கபிலன் வைரமுத்து

No comments:

Post a Comment