NFTECHQ

Tuesday 17 January 2017

மக்கள் திலகத்துடன்

சில வினாடிகள்


1967
சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு நல்லமுத்து அவர்கள் காலமானதையொட்டி ஒரு இடைத்தேர்தல் வந்தது.

தி.மு.கசார்ப்பில் போட்டியிட்ட திரு வீரமணி அவர்களுக்குவாக்குக் கேட்க மக்கள் திலகம் சங்ககிரி வந்தார்.

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆசிரியர் ஒருவருடன் சென்று மக்கள் திலக்த்தைப் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. உடன் கலைஞரும் இருந்தார்.

ஒரு விதமான பரவச நிலையில் மக்கள் திலகத்துக்கு வணக்கம் சொன்னேன். எனது ஆசிரியர் என்னை "இவன்தான் எங்கள் பள்ளியின் தமிழ் மன்றச் செயலாளர்" என அறிமுகப்படுத்தினார்.

"என்ன படிக்கிறாய்" என கேட்டார்.

நான் "ஆறாம் வகுப்பு படிக்கிறேன்" என்றேன் பவ்யமாக.

"ஆறாம் வகுப்பு படிக்கும் போதே தமிழ மன்றச் செயலாளரா? என எனது ஆசிரியரைப் பார்த்து வினவினார்.

"தமிழ் நன்றாகப் படிப்பான். தமிழ் நன்றாகப் பேசுவான். கையெழுத்தும் நன்றாக இருக்கும். ஆகவே இவனை சிறப்பாக முன்னேற்றும் எண்ணத்துடன் தலைமை ஆசிரியர்  இவனை அந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்தார்" என்றார்.

உடனே அவர் என்னைப் பார்த்து "நல்லாப் படிக்கணும். உன்னால முடிஞ்சதைப் பிறருக்குச் செய்யணும்" என்றார்.

"சரீங்க  JB சார்'" என்றேன்.
(JB என்பது அன்பே வா படத்தில் அவரது பெயர்.

"சினிமாவெல்லாம் பார்பாயா"  என்றார்.

நான் "எப்பவாவது பார்ப்பேன்"
என்றேண்.

அதற்குள் ஆசிரியர் அவருக்கு வணக்கம் சொல்லி என்னை அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்றார்.

உன்னிடம் இத்தனை வினாடிகள் அவர் பேசியது மிகப் பெரிய வாய்ப்பு என்று முதுகில் தட்டினார்.

கலைஞரையும் சந்தித்தோம். வணக்கம். சொன்னோம். அவர் எனது முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு கலைஞரை இரண்டு முறை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால்  மக்கள்  திலகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த ஒரே முறைதான்.

எனது ஆசிரியர் 2015ல் தனது 81ஆவது வயதில் காலமானார். அவர் உடல்ந்லம் சரியில்லை என அறிந்து அவரைக் கடைசியாக சந்தித்த போது அவர் இதை நினைவு கூர்ந்தார். "எனக்கும் சற்று நிம்மதீடா குமார். அபர் சொன்னவாறே நீயும் உன்னால் முடிந்ததைச் செய்துள்ளாய்" என்றார். எனது அரசியல் கொள்கை நிலைபாடு குறித்தும் அவர் என்னுடன் உரையாடினார் எனது ஆசிரியர்.

இப்பொழுதும் உணர்கிறேன்.

மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி மக்கள் திலகத்திடம் இருந்தது.

அதனால்தான் இன்றும் அவர் மக்கள் மனதில் நிற்கிறார்.

மக்கள்  திலகத்தின் நூற்றாண்டு தினம் இன்று. ஜனவரி 17.

No comments:

Post a Comment