NFTECHQ

Wednesday 28 January 2015

அணுவைத் துளைத்து ஓர் ஒப்பந்தம்



அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நடத்திய முதல் பேச்சுவார்த்தையிலேயே, அணுஉலை ஒப்பந்தங்களில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. எத்தகையத் தீர்வு என்பது குறித்து இரு நாடுகளுமே விளக்க முற்படவில்லை. இருப்பினும், அணுஉலை விபத்துக் காப்பீடு சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தொடரும் என்று இந்திய அரசுத் தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.
போபால் விஷவாயுக் கசிவில் பல ஆயிரம் பேரை பலி கொடுத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, முழுமையான இழப்பீடு பெறாதவர்களும், கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கும் நிலையும் இருப்பதும், இதற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்படாமலே போனதும் இந்தியாவால் மறக்க முடியாத, ஆற்றொணாத் தீத் தழும்பு. ஆகவேதான் 2011-இல், அணுஉலை விபத்துக் காப்பீடு சட்டத்தின் இரண்டு பிரிவுகளில் (17, 46) கூடுதல் விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.
அமெரிக்காவுடன் நாம் அணுஉலை ஒப்பந்தம் செய்து கொள்வதில் நிலவிய சிக்கல், யார் இழப்பீடு தர வேண்டும், அதன் அதிகபட்ச அளவு எவ்வளவு என்பதுதான். அணுஉலை விபத்து இழப்பீட்டு சட்டத்தின் பிரிவு 17-பி குறிப்பிடும் விநியோகிப்பாளர் (சப்ளையர்) என்பவர் யார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்பதும், பிரிவு 46-இன் படி, அணுஉலை விபத்தில் இழப்பீடு வரம்புகள் கிடையாது என்று இருப்பதும் எதிர்ப்புக்கு ஒரு காரணம்.
விபத்துகால இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்க அணுஉலை ஒப்பந்தத்தின்படி விநியோகிப்பாளர்கள் அனைவரும் அமெரிக்க நிறுவனங்கள். ஜி.ஈ.,வெஸ்டிங்ஹவுஸ் போன்ற நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள். இவர்கள் காப்பீடு செய்வதெனில் அமெரிக்க நிறுவனங்களிடம்தான் செய்ய வேண்டியிருக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் சர்வதேச அணுஉலைக்கூட விதிமுறைகளில் இல்லாததால், காப்பீடு வழங்க மாட்டார்கள் என்று அமெரிக்க வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
நரேந்திர மோடி அரசு, அவசர அவசரமாக அவசரச் சட்டத்தின் மூலம் காப்பீட்டு மசோதாவை நடைமுறைப்படுத்த முற்பட்டதன் காரணம் இப்போது புரிகிறது. அமெரிக்க அதிபர் விஜயத்தின்போது, அணு உலை ஒப்பந்தத்திலிருக்கும் முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும் என்பதால்தான் அவசரச் சட்டம் போடப்பட்டிருக்கிறது.
தற்போது மோடி - ஒபாமா பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இந்த சுமுகத் தீர்வுக்கான காரணங்களை அரசு சொல்லவில்லை என்றாலும் அவற்றை நம்மால் ஒருவாறாக ஊகிக்க முடியும்.
அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தின்படி, விபத்து நேரிட்டால் இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1,500 கோடிக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இந்தியாவில் அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு இத்தகைய பெருந்தொகைக்கு காப்பீடு வழங்கும் மூலதனத் தகுதி இல்லை என்பதால் சிக்கல் இருந்தது. தற்போது காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகள் தொடங்கவும், இந்திய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு காப்பீடு வழங்கவும் இயலும். ரூ.1,500 கோடிக்கு காப்பீடு தருவது அவர்களுக்கு சிரமம் அல்ல.
பிரிவு 46-இன் படி இழப்பீடு கோருவதில் அதிகபட்ச உச்ச வரம்புகள் இல்லை என்ற ஷரத்தை இந்தியா வலியுறுத்தாமல் இருக்கும் என்பதை உறுதி கூறும்படி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்ஜி ஆலோசனை வழங்கியிருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதுவும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இதுவரை இருந்த தடைகள் இனி இருக்காது. இந்த வகையில்தான் சுமுகத் தீர்வு காணப்பட்டிருக்க முடியும்.
இனிமேல் அதிகக் காலதாமதம் இன்றி அமெரிக்க நிறுவனங்களான ஜி.ஈ., ஹிட்டாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் ஆகியவை இந்தியாவில் அணு உலைகளை நிறுவத் தொடங்கும். ஏற்கெனவே, குஜராத்திலும், ஆந்திரப் பிரதேசத்திலும் இந்த நிறுவனங்கள் அணுஉலைகளை நிறுவுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இழப்பீடு தொடர்பான தயக்கத்தால்தான் அவர்கள் செயல்படாமல் தாமதித்து வந்தனர்.
ரூ.1,500 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யும்போது, அந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய சந்தா எவ்வளவாக இருக்கும்? அந்தத் தொகையை அவர்கள் விநியோகம் செய்யும் பொருள்களின் மேல் ஏற்றித்தான் விலை நிர்ணயிக்கப் போகிறார்கள். இதனால், 2020-இல் 20,000 மெகாவாட் மின்சாரத்தை அணுஉலை மூலம் உற்பத்தி செய்ய முடிந்தாலும்கூட, அதற்கான செலவு கூடுதலாக இருக்கும். இந்தக் கூடுதல் செலவை அரசு எவ்வாறு ஈடு செய்ய முடியும்?
அதையும் பேசி இருப்பார்கள். கரியமில வாயுவைக் குறைக்கும் கடப்பாட்டுக்காக வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தரும் உதவித் தொகையில், அணுஉலை காப்பீட்டு சந்தாவையும் சேர்த்து வழங்கி, அணுமின் உற்பத்திச் செலவின் கூடுதல் தொகைக்கு ஈடு செய்வது என்பதும் பேச்சாக இருக்கலாம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அதிபர் புஷ்ஷின் பதவிக்காலம் முடியும் தறுவாயில் இருந்தது. இப்போது அதிபர் பராக் ஒபாமாவின் நிலையும் ஏறத்தாழ அதுதான். போகிற போக்கில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.
அணுவைத் துளைத்துத் திணித்த ஒப்பந்தம்!
தினமணி தலையங்கம் 28.01.2015

No comments:

Post a Comment