NFTECHQ

Thursday 2 October 2014

மனசாட்சி

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பதவிகளை வகிக்க இருப்பவர் எடுத்துக்கொள்ளும் ரகசியக் காப்புப் பிரமாணங்களைச் சத்தியம் என்ற வகையில் கொண்டுவர முடியாது. அவை உறுதி ஏற்புகள். ஆனால், எதன் பேரால் உறுதி தருகிறார்கள் என்பதில் வருகிறது சத்தியம் என்ற உணர்வு. இந்த உறுதி ஏற்புகள் பெரும்பாலும் கடவுளின் பேரால் எடுக்கப்படுவதே உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. கடவுள் நம்பிக்கை அற்றவர் மன சாட்சியின் பேரால் உறுதி எடுக்கும் நடைமுறை உருவானது. கடவுளை நம்பாதவர் கடவுளின் பேரால் உறுதி எடுப்பது சத்தியத்தை மீறியதாகிவிடும். சத்தியம் கடவுளைவிட உயர்ந்தது என்று மனிதர்கள் உண்மையாகவே நம்பியிருக்கிறார்கள். நக்கீரன் தமிழ் உதாரணம். சார்லஸ் பிராட்லா இங்கிலாந்து சான்று.
கடவுளைத் தவிர்த்து, மனசாட்சியின் பேரால் அரசாங்க உறுதிமொழிகள் அமையும் நடை முறைக்குக் காரணமானவர் சார்லஸ் பிராட்லா (1833-1891). இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், ‘கடவுள் பேரால்உறுதி
மொழி ஏற்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற விதி, உறுதி ஏற்காமல் அவரை அவையில் அமர அனுமதிக்கவில்லை. அவரும் உறுதியாக நின்றார். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. மறபடியும் நின்றார். மறுபடியும் மறுத்தார். இப்படி மூன்றுமுறை நடந்த பிறகு வேறு வழியில்லாமல் நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்தி அவரை உறுப்பினராக்கிக்கொண்டது அரசு. மனசாட்சி முறை இப்படித்தான் உலகத்தில் தொடங்கியது. பெர்னார்ட்ஷா உட்பட பலர் பிராட்லாவின் பக்கம் நின்றனர். 1891-ல் காலமான பிராட்லாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 3,000 பேரில் நம்முடைய 22 வயது காந்தியும் ஒருவர்.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் இன்று அக்டோபர் 2. ந்டக்கும் நிகழ்வுகளைக் கண்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியத்தையும் வேதனையையும் அளிக்கிறது என்று காந்தியடிகள் 1947ல் மனம் உடைந்து எழுதினார். மதத்தை விட மனிதத்தின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர். வாழச் சொன்னவர். அகிம்சை, உண்மை, நேர்மை எளிமை, சத்தியம்   அனைத்திற்கும் உலகத்தின் சாட்சியாக திகழ்பவர்.
இன்று தூய்மை தினமாக அவரது பிறந்த நாள் அணுசரிக்கப்படுகிறது. அவர் நினைக்கப்படுகிறார் என்பது மகிழ்ச்சி. ஆனால் மனதில்,செயலில், அரசியலில்,நிர்வாகத்தில் என்று தூய்மை வரும் என்பதே காந்தியை நேசிப்போரின் எதிர்பார்ப்பு.
அது ஒரு நாள் நிறைவேறும்.

காந்தியடிகள் ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் ஒன்றை தலைமை தாங்கி 30 நாட்கள் நடத்தினார். போராட்டம் வெற்றி. தொழிலாளிகளின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. அதன் பிறகு காந்தியடிகள் அந்த ஆலையின் முதலாளிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இப் போராட்டத்தால் தங்களுக்கு  ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் பண இழப்புக்கும் நான் மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டார்.
ஒரு மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.


No comments:

Post a Comment