NFTECHQ

Monday 27 October 2014

தொழிற்சங்க இயக்கம் கண்ட தோழர்!



மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் 19.5.1914-இல் தங்கமணி பிறந்தார்.
மேல்நாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, கேரள காந்தி என்று அழைக்கப்பட்ட கே.பி. கேசவன் மேனன் மூலம் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டு, சிங்கப்பூரில் அவருடன் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போர் காரணமாக தாயகம் திரும்பி, மதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டார்.
வாழ்க்கையில் நல்லவராகவும், வழக்குகளில் வல்லவராகவும் பேரெடுத்தவரை, பாதிக்கப்பட்டோர் பெருமளவில் அணுகினர். வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத் தந்தார்.
1942இல், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம், நாடெங்கிலும் பரவியது. தீப்பிழம்பாக செயல்பட்டவர்கள் கடுமையான தண்டனைகளை பெற்று, கொடுமைபடுத்தப்பட்டனர்.
அவர்களுள் இளம் வயதிலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி சிவஞானத்தை கொன்றுவிட, சிறை அதிகாரிகள் முடிவு எடுத்து அவரை வழக்கு மன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, தப்பிக்க முயன்றார் என்ற காரணத்தைக் காட்டி சுட்டு கொன்று, உடலை அப்புறப்படுத்தினர்.
இதனை தங்கமணிக்கு தெரிந்த உயர் காவலர் ராமையா கூறக் கேட்டு துடித்த தங்கமணி, இப்படிப்பட்ட இழிசெயலை செய்த அரக்கமனமுடைய சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தார். தண்டனை பெற்றுத் தந்தார். போராட்டத்தில் பங்கு கொண்ட பலர் விடுதலை பெறவும் வழிவகுத்தார்.
தொழிலாளர்களின் அழைப்பை ஏற்று மதுரை வந்திருந்த திரு.வி. கல்யாணசுந்தரனாரை, தங்கமணி சந்தித்தார்.
திரு.வி.க. தங்கமணியிடம், தொழிலாளர்களுக்காக சங்கங்கள் அமைக்க உதவிடுமாறும் அவர்களுக்கு தக்க வழிகளில் வழிகாட்டியாகவும் இருக்க கோரினார். தங்கமணி அதனை ஏற்று, சிதறி கிடக்கும் தொழிலாளர்கள் உழைக்கும் தொழிற்சாலைகளில் சங்கங்கள் நிறுவி அவர்களுக்கு பாடமும், பயிற்சியும் அளித்து, தன்னம்பிக்கையை விதைத்தார்.
மதுரை மாநகரில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட பெரிய நிறுவனமான எஸ்.ஆர்.வி.எஸ்.இல் தொழிலாளர்களின் உழைக்கும் நேரம் வரம்பின்றி நீடிக்கப்பட்டதை அவர்கள் நடத்தும் விதத்தையும், குறைந்த ஊதியமும், நிரந்தரமற்ற பணியும், மாற்ற, தங்கமணி பேச்சுவார்த்தை வாயிலாக விரும்பியும், நிர்வாகம் ஏற்க மறுத்த பின், காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை முறைப்படி துவக்கினார்.
தொழிலாளர்களின் எழுச்சி நிர்வாகத்தை மருளச் செய்ததால், அரசின் உதவியுடன் "தீர்ப்பாயம்' அமைத்தது.
அடுத்து டி.வி.எஸ்.ஸில் நடந்த போராட்டத்தில், குடும்பத்தோடு, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டு சிறை சென்றனர். தங்கமணி, நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.
தொழிற்சங்க இயக்க வரலாற்றில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தனியாக சட்டம் இயற்றச் செய்தவர் தங்கமணி. அந்த சட்டத்தின் பெயர் "மோட்டார் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் ஆக்ட், 1961.
பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தலைவராக இருந்த "சோவியத் யூனியன் நண்பர்கள்' சங்கத்தில் சேர்ந்து, அதன்மூலம் பொதுவுடமை தத்துவத்தில் ஈடுபட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார்.
1957-இல் மதுரை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் நடைபெற்ற "உலக தொழிலாளர் யூனியன் காங்கிரஸ்' மாநாட்டிற்கு நாடாளுமன்ற குழுவில் சென்றார்.
அம் மாநாட்டை துவக்கி வைத்த சீன அதிபர் மா சே துங் எதிரில் அமர்ந்திருந்த தங்கமணியை கண்டதும் பாதுகாப்பு விதிகளை மீறி அவரை கட்டியணைத்து கை குலுக்கினார்.
ஓய்வு நேரங்களில் நாடாளுமன்ற நூல் நிலையத்திலுள்ள நூல்களை படித்தார். தேசிய பிரச்னைகளில் பங்கு கொண்டு தெளிவாக பேசினார். கடமை உணர்வும், கட்டுப்பாடும் கொண்டவர்.
1971-இல் மதுரையிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் பெண்கள் கல்லூரிக்கு மீனாட்சி பெண்கள் கல்லூரி என்று பெயரிட்டார்.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழகப் பிரிவுக்கு பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் இருந்தவர், பொதுவுடமை கட்சி பிளவுபட்டபோது, தாய் ஸ்தாபனத்தில் தொடர்ந்தார்.
அடுத்து, அதன் பாதிப்பினால், தொழிற்சங்கம் பிரிந்தபோது, மனம் வெதும்பினார். தங்கமணி மக்களின் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர் வாழ்வு மேம்படவும், ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்தார்.
இவரது வாழ்க்கை துணைவி வள்ளியம்மா பிரபல தொழிலதிபர் ராமசாமி நாடாரின் தவப்புதல்வி. முற்றும் துறந்தவர்களை பற்றி படித்திருக்கிறோம். ஆனால் பார்த்ததில்லை. இவ்விருவரும் இப்படிப்பட்ட தவ வாழ்க்கையை மனம் உவந்து, வலிந்து ஏற்றவர்கள்.
எல்லா சுகங்களையும் உதறி எறிந்து, எளிய வாழ்வில், இறுதி வரை எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் கட்சி அலுவலகமான சென்னை தியாகராயநகர் பாலன் இல்லத்தில், ஓர் அறையில் தங்கியதை தொண்டர்களே கண்டு வியந்தனர்.
கே.டி.கே. என்று தோழர்களால் அழைக்கப்பட்ட கே.டி.கே. தங்கமணி, 2001-இல் மறைந்தார்.
இவ்வாண்டு அவரது நூற்றாண்டு.

No comments:

Post a Comment