NFTECHQ

Monday 18 June 2018


வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு இன்று ஒப்புதல்


வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு இன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இழப்பை எதிர்கொண்டுவரும் வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாக இந்நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்நிறுவனங்களின் இணைப்புக்குத் தொலைத் தொடர்புத் துறை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜூன் 17ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில், “வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு ஜூன் 18ஆம் தேதி ஒப்புதல் அளித்து அதற்கான சான்றிதழை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் வோடாபோன் இந்தியா நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணத்திற்கான ஓர் ஆண்டு வங்கி உத்திரவாதத்தைத் திருத்தியமைக்க ஐடியா நிறுவனம் கேட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று இரு நிறுவனங்களும் தங்களது நிலுவைத் தொகையை செலுத்தி விடும்என்று கூறியுள்ளார்.
இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடாபோன் ஐடியா லிமிடெட் என்ற பெயரில் இயங்க முடிவெடுத்துள்ளன. இந்தப் பெயர் மாற்றம் ஜூன் 26ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தில் வோடாபோன் நிறுவனம் 45.1 விழுக்காடு பங்கையும், ஆதித்ய பிர்லா குழுமம் 26 விழுக்காடு பங்கையும், ஐடியா பங்குதாரர்கள் 28.9 விழுக்காடு பங்கையும் கொண்டிருப்பார்கள்.
இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவராக பிர்லா முன்மொழியப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக பாலேஸ் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல புதிய நிறுவனத்தின் புதிய நிதி செயற்பாட்டாளராக ஐடியாவின் தலைமை நிதி அதிகாரி அக்ஷய மூந்த்ரா நியமிக்கப்படவுள்ளார். இணைப்புக்குப் பிறகு இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 23 பில்லியன் டாலர்களாக இருக்கும்.


No comments:

Post a Comment