NFTECHQ

Friday, 21 July 2017

மம்மி
ஒரு கல்லுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் தினமும் வளர்கிறோம். ஆனால், கல் அப்படியே இருக்கும். கல் மட்டுமல்ல, உயிரில்லாத எந்தப் பொருளுக்கும் வளர்ச்சி இல்லை. கல், மண், சிலை, படம், புத்தகம், மேஜை, வீடு, பேனா, பெட்டி என்று அனைத்துப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், இந்த நிமிடமே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

1835-ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா? பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு ஒரு பொருள் வந்துசேர்ந்தது. ஒரு பெரிய கறுப்புப் பெட்டி. கவனமாக உள்ளே எடுத்துச் சென்றார்கள். பெட்டியின் மேல்புறத்தில் அழகிய, வண்ணச் சித்திரங்கள் இருந்தன. அதே சமயம் அது மிகவும் பழைய பெட்டி என்பதால் உடைந்துவிடக் கூடாதே என்று பொறுமையாகப் பிரித்தார்கள். பெட்டிக்கு உள்ளே கரிய நிறத்தில் ஒரு மம்மி. அதாவது, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடல்.
பெட்டிக்கு உள்ளே இருந்த எகிப்திய எழுத்துகளை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரியவந்தன. பழங்கால எகிப்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் மம்மிதான் அது. அவர் பெயர், Hornedjitef. ஒரு கோயிலில் பூசாரியாக இருந்திருக்கிறார். மூன்றாம் தாலமி என்னும் மன்னரின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியானால் இந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 2,230 ஆண்டுகள்.

அடடா, ஒரு பழைய பெட்டிக்குள் இத்தனை வரலாறா என்று திகைத்து மேலும் ஆராய்ந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய எழுத்துகளும் ஓவியங்களும் காணப்பட்டன. பெட்டிக்கு உள்ளே மேல்புறத்தில் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மம்மிக்கு அருகில் இருந்த சிறிய கலை வேலைப்பாடு கொண்ட பொருட்கள் காணப்பட்டன. அவை என்ன? பழைய வரலாற்று நூல்களை எடுத்து வைத்துத் தேடியபோது, அவை மந்திர சக்தி வாய்ந்த தாயத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.
இப்போது ஓரளவுக்கு அந்த மம்மியைப் பற்றி அவர்களுக்குப் புரிந்துபோனது.
அந்தப் பூசாரி மீண்டும் உயிருடன் திரும்ப ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, தன் உடலைக் கவனமாகப் பாதுகாக்கச் சொல்லி, தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் பயபக்தியுடன் அவரைப் பதப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடவே தாயத்துகளையும் வைத்திருக்கிறார்கள். திரும்பவும் உயிர் வருவதற்காகச் சில மந்திரங்களையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
ரொம்ப நன்றி மம்மி, உன்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்லி, பெட்டியைப் பூட்டி வைத்தார்கள் ஆய்வாளர்கள். பல ஆண்டுகள் கழிந்த பிறகு புதிய ஆய்வாளர்கள் வந்து திரும்பவும் பெட்டியைத் திறந்தார்கள். மீண்டும் முதலில் இருந்தே ஆராயத் தொடங்கினார்கள். மேலும் பல விஷயங்கள் கிடைத்தன. மம்மி இருந்தது ஒரு பெட்டியில் அல்ல. அது உண்மையில் ஒரு சிறிய உலகம்.

பெட்டியைத் திறந்தால் உள்ளே மேல்புறத்தில் வானம். அதனால்தான் அங்கே நட்சத்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். அங்கும் இங்குமாக உள்ள கோடுகள், சாதாரணக் கோடுகள் அல்ல, அது திசை காட்டும் ஓவியம். அதாவது, வரைபடம்.
மம்மி சொர்க்கத்துக்குப் போயாக வேண்டும். ஒருவேளை அதற்கு வழி தெரியாவிட்டால் அங்கும் இங்கும் அலையக் கூடாது அல்லவா? அதனால்தான் சொர்க்கத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்காக அந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இப்படியெல்லாமா யோசித்திருக்கிறார்கள்!
சரி, மம்மி நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது, இனி மேற்கொண்டு திறக்கவேண்டியிருக்காது என்று நினைத்து பெட்டியை இறுக்கமாக மூடினார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. சில புதிய ஆய்வாளர்கள் மீண்டும் ஆர்வத்துடன் வந்து பெட்டியைத் திறந்தார்கள். இந்தமுறை மம்மியை வெளியில் எடுத்து நவீன அறிவியலைப் பயன்படுத்தி ஸ்கான் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. மம்மியின் முதுகில் சில எலும்புகள் முறிந்திருந்தன. உயிருடன் இருந்தபோது அந்த மனிதனுக்கு முதுகு வலி இருந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.
உற்சாகத்துடன் மேலும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இவர் உயிருடன் இருந்தபோது என்ன சாப்பிட்டிருப்பார்? எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார்? அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா? அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார்? அவருடைய வீடு எப்படி இருந்தது? அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார்? அவருக்குப் பல் வலி, தலை வலி எல்லாம் வருமா?

தெரியவில்லை. ஆனால் விடை தெரியும்வரை அவர்கள் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். பாருங்கள், கிடைத்தது என்னவோ ஒரே ஒரு பெட்டிதான். ஆனால், அதை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் புதிது புதிதாக நிறைய கற்க முடிகிறது. முதல்முதலில் 1835-ம் ஆண்டு திறந்தபோது அந்த மம்மியைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இப்போதோ நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம் நம்முடன் சேர்ந்து அந்தப் பெட்டியும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து பற்றிய நம் அறிவும் வளர்ந்திருக்கிறது, இல்லையா?

இந்தப்  பதிவைத் தந்து உதவிய தோழர் மாலி அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment