NFTECHQ

Wednesday 24 December 2014

டிசம்பர் 23-24

பி.கக்கன்
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த பி.கக்கன் மறைந்த தினம் டிசம்பர் 23.
இளம் வயது முதலே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன், 1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்தார். நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைச்சராக இருந்தபோது மதுரை வேளாண்மைக் கல்லூரியை தோற்றுவிதத்ததோடு , வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களையும் நிறைவேற்றினார். அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக வாகனம் ஏதும் இல்லாமல் அரசு பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததும், நோய் வாய்ப்பட்டு போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததும் அவரின் தூய்மையான அரசியல் வாழ்கைக்கு, எடுத்துக்காட்டாகும்.
பெரியார்'
'தந்தை பெரியார்' மறைந்த தினம் டிசம்பர் 24. ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார். 1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் 'மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடத்திலிருந்து அகற்றுவதை' நோக்கமாக கொண்டு செயல்பட்டது. திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது. எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24, இதே நாளில் தான் இயற்கை எய்தினார். 
எம்.ஜி.ஆர்
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் டிசம்பர் 24. தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. 135 திரைப்படங்களில் நடித்த இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தன்னிகரற்ற ஜாம்பவனாக திகழ்ந்தார். 1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் அவ்விருதை ஏற்க மறுத்துவிட்டார். 1977 ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முதலமைச்சர் பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment