NFTECHQ

Wednesday 30 July 2014

இந்தியாவில் எப்போது?



உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய்கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment