NFTECHQ

Wednesday 4 July 2018


இந்தியாவில் சீன வங்கி தொடக்கம்

பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது சீன அதிபர் க்ஷிஜின்பிங்கைச் சந்தித்தார். ஷாங்காய் கூட்டுறவு நிறுவன மாநாட்டுக்கு முன்பான இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரக் கூட்டுறவு, மக்களுக்கிடையேயான பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனுடன் பேங்க் ஆப் சீனா வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 105 வருடப் பழமை வாய்ந்த இவ்வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது.
பேங்க் ஆப் சீனா வங்கி தெற்கு ஆசியாவில் தனது முதல் கிளையைப் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் சென்ற ஆண்டு தொடங்கியது. ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இவ்வங்கியின் சந்தை மூலதன மதிப்பு 158.6 பில்லியன் டாலர்களாகும். இந்தியாவில் சேவை வழங்கும் இரண்டாவது சீன வங்கி என்ற பெருமையைத் தனதாக்கவுள்ள இவ்வங்கி, சொத்து அடிப்படையில் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகும். சீன வங்கியைப் போலவே, ஈரான், தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 7 வங்கிகள் இந்தியாவில் கிளை தொடங்க விண்ணப்பித்துள்ளன.


No comments:

Post a Comment