NFTECHQ

Tuesday 16 June 2015

ஏழைகள் மீது ஏறும் சுமை


இந்தியா முழுவதற்கும் ஒரே சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற சீர்திருத்தம் பற்றி 10 ஆண்டு களாகப் பேசிவருகிறோம். ஏற்கெனவே, இந்திய மாநிலங்களில் அமலாகிவரும் மதிப்புக் கூட்டப்பட்ட வரி(வாட்) முறைதான் இது. ஆனால், இன்னமும் விரிவானது. வாட் என்பது விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்குகள் மீது மட்டும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி-யோ சரக்கு, சேவை இரண்டின் மீதும் விதிக்கப்படுவது.
இப்போதுள்ள வரி நிர்வாகத்தில் சரக்குகள் மீது மட்டும் மாநிலங்கள் விற்பனை வரி விதிக்கின்றன, சேவைகள் மீது அல்ல. மத்திய அரசு உற்பத்திப் பொருட்கள் மீதும் சேவைகள் மீதும் வரி விதிக்கிறது, மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் மீது அல்ல. சரக்கு, சேவை வரியானது (ஜி.எஸ்.டி.) இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரே விதமான வரி விதிப்பை உறுதி செய்யும். எல்லா பகுதிகளிலும் எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் வரி விதிப்பை விரிவுபடுத்தும். மத்திய அரசும் மாநில அரசுகளும் சரக்குகள், சேவைகள் மீது வரிவிதிக்க அதிகாரம் வழங்குவதற்காகத்தான் அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.
பாதிக்கப்படும் நிதி நிர்வாகம்
20 ஆண்டுகளுக்கு முன்னால் மதிப்புக் கூட்டப்பட்ட வரிக்கு (வாட்) ஆதரவாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அதே வாதங்கள்தான் சரக்கு, சேவை வரிக்கு ஆதரவாகவும் வைக்கப்படுகின்றன. சரக்கு, சேவை வரியானது எல்லாவிதமான மறைமுக வரிகளையும் தனக்குள்ளே அடக்கிவிடுகிறது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறது. வரி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய மூன்று கட்டங்களிலும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இடுபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியைக் கணக்கிட்டு, இறுதி நுகர்வோர் மட்டும் வரியைச் செலுத்த வேண்டியிருப்பதால் வரிச்சுமை கூடிக்கொண்டே போகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. ஏற்றுமதிக்குப் போட்டி போட முடிகிறது. சரக்கு, சேவை வரி பொதுவாக அமல்படுத்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பே 2% உயர்ந்துவிடும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இது சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், மாநிலங்களின் நிதி நிர்வாகமும் சுயாட்சித் தன்மையும் நிச்சயம் பாதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இழப்பு?
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பொது சரக்கு, சேவை வரி மசோதா, அரசியல் சட்டத்தின் 122-வது திருத்த மசோதா 2014 என்று அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒரே சரக்கு, சேவை வரி இல்லை, இரண்டு விதமாக உள்ளது. மத்திய அரசு நிர்வகிக்கப்போவது மத்திய சரக்கு, சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.) என்றும் மாநிலங்களால் நிர்வகிக்கப்படப்போவது மாநில சரக்கு, சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) என்றும் அழைக்கப்படும். இதன் கண்காணிப்பு, நிர்வாகமும் இருவேறு நிலைகளில் இருக்கும். இந்த வரி விகிதத்தை சரக்கு, சேவை வரி கவுன்சில் என்ற அமைப்பு நிர்ணயிக்கும். இதன் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். மாநிலங்களின் நிதி, வருவாய்த் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்கள். இந்த கவுன்சில் வரி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, மாநிலங்கள் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அதே வேளையில், இந்த வரி விகிதங்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப திருத்த வரி விகிதங்களில் குறைந்தபட்சம் - அதிகபட்சம் என்ற அளவு நிர்ணயிக்கப்படும். இவ்விரு வரம்புக்குள் ஏதேனும் ஒரு விகிதத்தில் மாநிலங்களில் வசூலித்துக் கொள்ளலாம்.
சமூக பரிமாணம்
சரக்கு, சேவை வரியானது எல்லா சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். உற்பத்தி வரி என்பது உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படுவது. சரக்கு, சேவை வரியோ நுகர்வோரால் செலுத்தப்படுவது. சரக்கையோ சேவையையோ அளிப்பவர் ஏற்கெனவே செலுத்திய வரியைக் கழித்துக்கொண்டுதான் இந்த வரியைச் செலுத்துவார். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சரக்கு, சேவை வரி என்ற மறைமுக வரியானது எல்லா வகை நுகர்வுக்கும் ஒரே சீரான விகிதத்தை உறுதி செய்யும். இப்போது அமலில் இருக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள், சலுகைகள், விலக்குகள் போன்றவற்றுக்கு இடமே இருக்காது.
சரக்கு, சேவை வரி முறையைத் தேர்ந்தெடுத்த பல நாடுகள் அத்தியாவசியப் பண்டங்களை இந்த வரியிலிருந்து விலக்கிவைத்துள்ளன. சிலவகைப் பண்டங்கள் மீது மிகக் குறைவான பொது வரியையே விதித்துவருகின்றன. விலக்குகள் மிகக் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ இருப்பதுதான் பொது சரக்கு, சேவை வரி முறைக்கு நல்லது.
எது லட்சிய வரி விகிதம்?
சரக்கு, சேவை வரி பொதுவென்றால் எத்தனை சதவீதமாக அது இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 13-வது நிதிக்குழுவுக்காக நியமித்த பணிக்குழுவானது அது 12% ஆக இருக்க வேண்டும். இதில் மாநிலங்களின் பொது சரக்கு, சேவை வரியாக 7%-ம், மத்திய அரசின் பொது சரக்கு சேவை வரியாக 5%-ம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 2014-ல் மாநில அரசின் பிரதிநிதிகள் இது 27% ஆக இருக்க வேண்டும் என்று கோரினர். இவ்விரண்டுமே சரியில்லை. 12% தான் வரி என்றால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு நிச்சயம். மதிப்புக் கூட்டப்பட்ட வரி விகிதம் 13% முதல் 14% ஆக இருக்கும்போது, 12% என்பது வருவாயைக் குறைத்துவிடும். 27% என்று விதித்தால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் சுமையாகிவிடும். இந்த அளவு 27%-க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று ஜேட்லி உறுதியளித்திருக்கிறார்.
மறைமுக வரிக்கு முக்கியத்துவம்
உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன. நேர்முக வரிகளைக் குறைத்துவிட்டு மறைமுக வரிகளை அதிகப்படுத்துகின்றன. வசதி படைத்த பணக்காரர்கள் அதிக பாரம் சுமக்க வேண்டும் என்ற காலம் மலையேறி, எல்லாச் சுமைகளையும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமத்துவதே வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தினால் அவை முதலீட்டை விலக்கிக்கொண்டு வேறு நாடுகளுக்குப் போய்விடும், அதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அத்தனையும் குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

2013-ல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் நேர்முக வரிகள் மூலம் கிடைக்கும் பங்கு 37.7% தான். தென்னாப்பிரிக்காவில் இது 57.5% ஆகவும் இந்தோனேசியாவில் 55.85% ஆகவும் இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் மறைமுக வரி விகிதம் இந்தியாவில் மேலும் அதிகரித்துவிடும்.

No comments:

Post a Comment