NFTECHQ

Monday 23 September 2019


வருங்காலத்திற்காக

ஒன்றிணைந்த உலகம்!

மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக ஒரு பொதுவான காரணத்திற்காக, ஒட்டுமொத்த உலகமும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது. வெறும் 16 வயது சிறுமியின் தலைமையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடத்திய புறக்கணிப்பு போராட்டம். அதுவும் எந்தவொரு கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காகவோ, அடையாளத்தை அடைவதற்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ நடத்தப்பட்ட போராட்டம் அல்ல இது. ஒட்டுமொத்த உலக மக்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கக்கோரி உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மாணவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களை முன்னெடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் .நா சபையில் ஒன்றுகூடுகின்றனர். இச்சந்திப்பில், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவில் இருந்து காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க உலக நாடுகளை வலியுறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இப்போராட்டமானது, நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 16 வயது சிறுமி க்ரேட்டா துன்பெர்க்கின் தலைமையில் நேற்று(20-09-2018) நடைப்பெற்றது. #Fridaysforfuture (வெள்ளிக் கிழமைகள் வருங்காலத்திற்கான துவக்கம்) என்ற ஹேஷ்டேக் அடங்கிய பதாகைகளுடன் 156 நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி ஆகிய பகுதிகளிலும் அமைதியான முறையில் பள்ளி மாணவர்கள் போராட்டங்கள் நடத்திவந்தனர். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பேங்கலூர், அஸ்ஸாம், மும்பை ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த உலகளாவிய புறக்கணிப்புப் போராட்டத்தை, 'fridaysforfuture.com' எனும் இணையத்தளம் ஒருங்கிணைத்துள்ளது. இந்த இணையதளமானது, க்ரேட்டா துன்பெர்க்கின் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டது. க்ரேட்டா துன்பெர்க்(16) முதன் முறையாக, பருவநிலை மாறுதல்களுக்காக சுவீடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சிறிய பதாகையுடன் தனியாளாக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் விதைத்த விதை, அதிவேகமாக வளர்ந்துவருகிறது.
அதுவும் ஆஸ்திரேலியாவில் அதிதீவிரமாக நடந்த போராட்டத்தில், ‘ஆஸ்திரேலிய மக்களே விழித்தெழுங்கள்’ ‘பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது’ ‘நம் பூமிக்காக நாம் போராடவேண்டும்போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர் சிறுமியர்களிடம் அதிகம் காணமுடிந்தது. ஆனால், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இப்படியொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. எந்த செய்தி ஊடகத்திலும் இப்போராட்டம் குறித்த சிறுகுறிப்பையும் காணமுடியவில்லை. நாம் செல்லவேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்கள் இனியாவது ஊடகங்களில் இடம்பெற வேண்டும். உலகமே உற்றுநோக்கிய ஒரு போராட்ட நிகழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்த ஆர்பாட்டம் ஆர்பரிப்பில்லாமல் அரங்கேறியிருக்கிறது. மனிதகுல வரலாற்றில் முதல் நிகழ்வாக, ஒரே ஒரு காரணத்தை மையமாக வைத்து, ஒட்டுமொத்த உலக மக்களும் ஒரே நாளில் போராடுவது இதுவே முதல்முறை. இது ஒவ்வொரு வாரமும் தொடர வேண்டும் என்றும், உலக அரசாங்கங்கள் பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்றும் உலகம் ஒரே குரலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இச்சிறுவர்களின் கோரிக்கை அவர்களின் எதிர்காலத்திற்கானது மட்டுமன்று, ஒட்டுமொத்த புவியின் எதிர்காலத்திற்குமானது.

No comments:

Post a Comment