NFTECHQ

Wednesday 14 February 2018

வாராக் கடன் தள்ளுபடி
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அரசு துறை வங்கிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் வாராக் கடன் முக்கியமானதாகும். ஏறக்குறைய ரூ.9 லட்சம் கோடி வாராக் கடனால் வங்கிகள் சிக்கித் தவிக்கின்றன. இதில் இருந்து மீட்பதற்காக சமீபத்தில் அரசு ரூ.2.11 லட்சம் கோடி முதலீட்டு நிதி வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், வாராக் கடன் தள்ளுபடி ஒவ்வொரு ஆண்டும் அரசு வங்கிகள் சார்பில் அதிகரித்து வருவது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதில் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதி ஆண்டில் ரூ.81 ஆயிரத்து 683 கோடி வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் எஸ்பிஐ வங்கியின் தள்ளுபடியாகும்.
கடந்த 2012-13 ஆம் ஆண்டில் அரசு வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் தள்ளுபடி என்பது, ரூ.27ஆயிரத்து 231 கோடியாக மட்டுமே இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துவிட்டது என அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரூ.34,409 கோடி, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.49,018 கோடி, 2015-16 ஆம் ஆண்டில் 57,585 கோடி, 2016-17 ஆம் ஆண்டில் ரூ.81,683 கோடி ஆக உயர்ந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தவிர்த்து, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.9,205 கோடியும், பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.7,346 கோடியும், கனரா வங்கி ரூ.5,545 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.4,348 கோடி கடனை கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்துள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அரசு வங்கிகளின் வாராக் கடன் தள்ளுபடி என்பது ரூ.53 ஆயிரத்து 625 கோடியாகும்.


No comments:

Post a Comment