NFTECHQ

Wednesday 6 March 2019


வளர்ச்சிவேண்டுமா,

வாழ்க்கை வேண்டுமா?

கதவைத் தட்டும் பேரழிவு: இயற்கை அன்னையின் மடிக்குத் திரும்புவோமா?

நரேஷ்
வெறும் இரண்டு நூற்றாண்டுகளுக்குள்ளாக, மனிதர்கள் இந்தப் பூமியை 50 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பருவ நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். அப்போது பூமியில் உயிர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
- தேசிய அறிவியல் அகாடமி மாநாட்டில் வெளிப்பட்ட கருத்து கட்டுரைக்குள் செல்லும் முன்பு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட நம்ப முடியாத சில தகவல்களைப் பார்த்துவிடலாம். ஏனென்றால்விரைவில் பூமி பேரழிவைச் சந்திக்கப்போகிறதுஎனும் வாதம்இயற்கை ஆர்வலர்களின்கூச்சல் அல்ல என்பதையும், இயற்கை ஆர்வலர்களைவிட அறிவியலாளர்களும் விஞ்ஞானிகளும்தான் இந்தப் பேரழிவைக் குறித்து அரற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
* மனிதச் செயல்களால் வெளிப்படும் சீரழிவுகள் இதே போலத் தொடர்ந்தால், 2030க்குள் புவியின் பருவநிலையிலும் வடிவமைப்பிலும் மிகப் பெரிய மாற்றம் நிகழும்.
* அந்த மாற்றம் என்பது 30 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பருவநிலையை ஒத்ததாக இருக்கும். அந்தக் காலகட்டத்தினை ‘Mid-Pliocene Era' என்று வகைப்படுத்தியிருக்கிறோம்.
* Mid -Pliocene Era எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டால், 2030 ஆண்டு என்ன மாதிரியான அழிவுகள் நிகழும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 30 லட்சம் ஆண்டுகளுக்கு
முந்தைய பூமியின் பருவநிலை மாற்றம் என்பது

1) பனிப்பாறைகளின் அதீத உருக்கம்
2) பூமியின் நிலமண்டல தட்டுகளின் நகர்வு
3) வளிமண்டலத்தில் அதீத அளவிலான கரியமில வாயுப் பொதிவு
ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றங்கள் ஆகும்.
* இந்தக் காலகட்டத்தில்தான் உயிரினப் பரிமாற்றத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் மனிதர்களின் பரிணாமம் விரைவானது. இப்போது அந்தக் காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இது என்ன மாதிரியான அழிவுகளை உண்டாக்கும் என்பதைக் கணிக்க முடியாது.
* இதே நிலை நீடித்தால் 2150 ஆண்டின் பருவநிலை என்பது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பருவநிலை போன்றதாக மாறும்.
* 50 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை - ‘Eocene era’ எனப்படும். தற்போதைய வளிமண்டல வெப்பநிலையைவிட 8-13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவிய காலகட்டம் அது.
இவை வெறும் கணிப்புகள் அல்ல. மேற்குறிப்பிட்ட அழிவுகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உறுதியானவை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறேன். இந்த ஆய்வு முடிவுகள் ஒரே ஓர் ஆய்வகத்தைச் சார்ந்த பொதுவான முடிவல்ல. National academy of science உடன் இணைந்து University of Bristol, Columbia University, University of Leeds, NASA Goddard Institute for Space Studies, The National Center for Atmospheric Research போன்ற உலகத் தரம் வாய்ந்த அதிநவீன தொழிற்கூடங்களில் கண்டறியப்பட்ட தகவல்கள் இவை.
அறிவியல், முன்னேற்றம் என்று அதிவேகத்தில் முன்னேறிச் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தமுன்னேற்றத்துக்காக நாம் பல்வேறு அழிவுச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறோம். இப்போதும் ஈடுபடுகிறோம். நாம் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் அழிவுகளுக்கும்முன்னேற்றத்தைக் காரணம் காட்டி அக்கறையின்றி நகர்ந்தோம். அதன் விளைவுகள் உண்மையில் நம்மை அதிவேகமாகப் பின்னோக்கி இழுத்து வந்திருக்கின்றன.
திரும்பிச் செல்ல இயலாத தொலைவுக்கு வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. திரும்பிச் செல்வதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன. வளர்ச்சிக் கதவுடன் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக அரவணைக்கக் காத்திருக்கும் இயற்கையின் மடிக்குத் திரும்புவோம்.

No comments:

Post a Comment