NFTECHQ

Wednesday 21 December 2016

நன்கொடை

 

ரூ.20,000-த்துக்கும் மேலான நன்கொடைகளில் தேசிய கட்சிகள் பெற்ற தொகை ரூ.102 கோடி: பாஜக முதலிடம்  



ரூ.20,000த்துக்கும் மேலான நன்கொடைகள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்ற நிலையில் இத்தகைய நன்கொடைத் தொகைகள் தேசியக் கட்சிகளுக்கு ரூ.102 கோடி வரை வந்துள்ளதாக ஜனநாயகச் சீர்த்திருத்த கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இத்தொகையில் பாஜக ரூ.76.85 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளது, அதாவது 613 நன்கொடைகள் மூலம் இந்தத் தொகை பாஜக-வுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 918 நன்கொடையாளர்கள் மூலம் ரூ.20.42 கோடி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 

ரூ.20,000த்துக்கும் குறைவான நன்கொடைகள் ஆய்வுகளுக்குள் வராது. இதனையடுத்தே ரூ.2000த்துக்கும் மேலான பெயரில்லாத நன்கொடையினை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
 

இந்த அறிக்கை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த கணக்கு விவரங்களின்படி சேகரிக்கப்பட்டதாகும். 2015-16-ல் ரூ.20,000த்துக்கும் அதிகமாக நன்கொடை பெறாத கட்சி பகுஜன் சமாஜ் கட்சியாகும்.
 

2014-15அ-ஐ ஒப்பிடும்போது 2015-16-ல் நன்கொடைகள் 84% குறைந்துள்ளது, அதாவது தொகைரீதியாக ரூ.528 கோடி குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

2014-15-ல் பாஜக பெற்ற நன்கொடை மதிப்பு ரூ.437.35 கோடி, இது 2015-16-ல் ரூ.76.85 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கிடையே பாஜக-வின் நன்கொடை 156% அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் நன்கொடை தொகை இதே காலக்கட்டத்துக்கிடையில் 137% அதிகரித்தது.
 

இந்த அறிக்கையில் நன்கொடை பற்றி பூர்த்தியடையாத தகவல்களையும் அரசியல் கட்சிகள் அளித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
 

இவ்வகையில் காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ.8.11 கோடி நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்கள் இல்லை. பாஜக தான் பெற்ற 2.19 கோடிக்கான நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்களை தரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment