வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் (மே 30,31) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மொத்த ஊதியத்தில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாராக் கடனைக் காரணம் காட்டி, 2 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதனை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 5ஆம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது, வாராக் கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பணிச்சுமைகளைக் குறைக்க புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மே 11ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டபடி மே 30, 31 ஆகிய 2 நாள்கள் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 21 பொதுத் துறை வங்கிகளில் இருந்து சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment